மல்லிகை ஜீவாவை முதன் முதலாக சந்தித்த பரபரப்பான அந்தத் தருணம்!

எழுத்தாளர் ஜீவாவின் 95 ஆவது பிறந்த தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு கவிஞர் மேமன் கவி எழுதிய 'டொமினிக் ஜீவாவும் நானும்’ எனும் நூலிலிருந்து...

பாடசாலை கல்வியை இடைநடுவில் நிறுத்திய பின்னர் எங்கள் குடும்பத் தொழிலான வர்த்தகத்தில் நான் ஈடுபடவில்லை. நூலகங்களுக்குச் சென்று நூல்களை எடுத்து வாசிப்பதுதான் என் வேலையாக இருந்தது. அந்த நாட்களில் கொழும்பில் நடந்த இலக்கியக் கூட்டங்கள் பற்றி அறிந்து, அக்கூட்டங்களுக்கு நான் செல்வதுண்டு. ஆனால் அங்கு வருகின்ற எவருக்கும் என்னை யாரென்றே தெரியாது. சிறுவனாக ஒரு மூலையில் உட்கார்ந்து ரசித்து விட்டு வந்து விடுவேன். இன்றைய நாட்களில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறுவது போல, அன்றைய நாட்களில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தேயிலை பிரசாரச் சபை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும். நான் அங்கு போவேன்.

அந்த மண்டபத்தில் ஈழத்து எழுத்தாளர்களான பல ஆளுமைகளைக் கண்டேன். பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, இளங்கீரன், பி​ேரம்ஜி, அந்தனி ஜீவா, முருகையன், ஈழவாணன்...இப்படியாகப் பல எழுத்தாளர்களைக் கண்டேன்.

அங்கு வெளியிடப்பட்ட நூல்களை வாங்கி வாசித்தேன். அது மட்டுல்லாமல், அந்தப் புத்தக வெளியீடுகளின் போது முக்கிய ஆளுமைகளின் உரைகளில் குறிப்பிட்டப்படுகின்ற நூல்களைக் குறித்து வைத்துக் கொண்டு மறுநாள் நூலகத்திற்குச் சென்று அப்புத்தகங்களைத் தேடி வாசித்தேன்.

இப்படியாக எனது வாசிப்பை வளர்த்துக் கொண்டேன். பிற்காலத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்த எனது முதலாவது கவிதைத் தொகுதியான 'யுகராகங்கள்' நூலின் அறிமுகவிழா ஒன்று அதே மண்டபத்தில் நடந்தமை என்னால் முடியாத ஒன்றாகும்.

அந்த மண்டபத்தில்தான் நான் முதல் முதலாக ஜீவாவைக் கண்டேன். பாடசாலைக் காலம் தொடக்கம் மல்லிகையை வாசிக்கத் தொடங்கி இருந்தேன். 73 களில் மல்லிகையை தீவிரமாக வாசிக்கத் தொடங்கி இருந்தேன். எமது வர்த்தக நிலையத்திற்கான ஒரு சிறுவிளம்பரத்தையும் வழங்கி இருந்தேன். கொழும்பில் அவர் தங்கி இருந்த இடம் தேடிச் சென்று அவருடன் பேசப் பயமாக இருந்தது. ஜீவா இலகுவில் யாரையும் அங்கீகரிக்க மாட்டார் என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். 1974 ஆம் ஆண்டு வெளிவந்த மல்லிகையை வாசித்து அது சம்பந்தமான ஒரு கடிதத்த்தை அவருக்கு அனுப்பிய நிலையில் அவருடன் நெருக்கமாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.

ஒரு நாள் கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். கையில் மு.தளையசிங்கத்தின் 'போர்ப்பறை' எனும் நூலின் முதலாம் பதிப்பு. அன்றே நான் தீவிர வாசகன். ஜீவாவுடன் முதல் வார்த்தை பேசினேன்.

என்னைப் பற்றியும் என் இலக்கிய ஆர்வத்தைப் பற்றியும் சொன்னேன். நடந்து கொண்டிருந்த அவர் சற்று நேரம் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார். அந்த ஆச்சரியத்திற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று எனது தாய்மொழி தமிழ் இல்லை. இரண்டாவது காரணம் அந்த நேரத்தில் என் கையில் இருந்த மு.தளயசிங்கத்தின் போர்ப்பறை என்ற நூல்.(அந்தக் காலகட்டத்தில் அந்த நூலில் அமைந்திருந்த கட்டுரைகளில் ஒரு கட்டுரையேனும் எனக்கு விளங்கவில்லை என்பது அவருக்குத் தெரியாத செய்தி).

ஜீவாவுடனான அந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளிவந்த அடுத்த மாத 1974 ஆம் ஆண்டு ஜூலை மல்லிகையில் 'இளந்தளிர் ' எனும் தலைப்பில் அன்று 17 வயதான என்னை அறிமுகப்படுத்தினார். அக்குறிப்பில் பின்வருமாறு எழுதி இருந்தார்.

தணியாத இலக்கிய ஆர்வம் கொண்ட இவரது பெயர் ஏ. கே ரஸாக். வயது 17 இவரது தாய் மொழி தமிழல்ல. வட இந்தியாவில் குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த மேமன்பாய் இனத்தவர் இவர். தமிழில் ஆர்வமுள்ளவர். கவிதைகள் எழுதுகின்றார். எந்தத் தமிழ் இலக்கியக் கூட்டத்திலும் இவரைச் சந்திக்கலாம், இவரது எதிர்காலம் மிகச் சிறப்பாக அமையும்.

ஜீவா என்னைப் பற்றி மேலும் ஏராளமாக எழுதி இருந்தார்.

அந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஒவ்வொரு மாத மல்லிகை இதழ் முடித்த பின்பும் கொழும்பு வரும் பொழுதெல்லாம் அவரைத் தவறாமல் சந்திப்பேன். அக்காலகட்டத்தில் மல்லிகை இதழ்களைச் சேகரித்து வைத்திருந்தேன். அவரைச் சந்திப்புக்கும் பின்னும் முன்னும் அவர் படைப்புகளை வாசித்து இருந்தேன். ஜீவா மாதந்தோறும் கொழும்பு வரும் பொழுதெலாம் மல்லிகையை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பேன். அவர் தங்குமிடத்திற்குத் தொலைபேசி எடுத்து அவர் வந்து விட்டாரா என விசாரித்து உடனடியாக அங்கு போய் மல்லிகை எடுத்து வந்து விடுவேன்.

இவ்வாறாக ஜீவாவுடான எனது நட்பும் நெருக்கமும் வளர்ந்தது.


Add new comment

Or log in with...