மாணவரின் கல்வி பாதிக்கப்படக் கூடாதென கருதி பாடசாலைக்கு பைசிக்கிளில் செல்லும் ஆசிரியர்கள்!

கிழக்கில் பெற்றோரிடமிருந்து ஆசீர்வாதத்துடன் குவியும் பாராட்டுகள்; எரிபொருள் இல்லாததால் தூர இடங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் திண்டாட்டம்!

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக பாடசாலைகள் மீண்டும் இயங்கி வருகின்ற போதிலும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வரவு குறைவாக இருந்த காரணத்தினால் பாடசாலைகள் அரைகுறையாகவே இயங்கின. நாட்டில் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்தன.

இருந்த பொழுதிலும் பெட்ரோல், டீசல் எரிபொருள் பிரச்சினை காரணமாக அதிகமான ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரவில்லை. மாணவர்களின் வரவும் குறைவாகவே இருந்தது. மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறுவதால் ஆசிரியர்களின் வரவும் குறைவாகவே இருந்தது.

மொத்தத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரவு குறைவு காரணமாக பாடசாலைகள் சீராக இயங்கவில்லை. பாடசாலைக்கு வருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விக் கல்லூரி பயிலுனர்களைக் கொண்டு பாடங்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கல்முனையிலுள்ள பிரபல கல்லூரியொன்றில் 168 ஆசிரியர்களுக்குப் பதிலாக 65 ஆசிரியர்களே சமுகம் அளித்திருந்தனர். 50 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வந்திருந்ததாக அதிபர் கவலையுடன் குறிப்பிட்டார்.

"பஸ் ஓடாமல் விட்டால், நாங்களும் வர மாட்டோம் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் எவ்வாறு பாடசாலை நடாத்துவது? என்று அதிபர் அலுத்துக் கொண்டார்.

பெரும்பாலான கிராமப் பாடசாலைகள் ஓரளவு இயங்கினாலும், நகர்ப் பாடசாலைகள் இயங்குவதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது. இன்று திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் இயங்குவது மேலும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

அதேவேளை அதிபர், ஆசிரியர்களுக்கென்று பிரத்தியேகமாக இன்னும் பெட்ரோல் விநியோகம் இடம்பெறவில்லை. இதனால் பாடசாலைகளை தொடர்ந்து நடத்த முடியாத ஒரு சூழல் கல்வித் திணைக்களத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. மேலும் எரிபொருள் பிரச்சினை காரணமாக அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

நாட்டில் நிலவும் மிகவும் மோசமான எரிபொருள் நெருக்கடியினால் பாடசாலைகளுக்கு தங்களது கடமையின் நிமித்தம் செல்ல முடியாதிருப்பதாக கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் திண்டாடுகின்றார்கள்.

இவ்வாறான சிரமங்கள் ஒருபுறமிருந்தாலும், கடமைப் பொறுப்பும் மனசாட்சியும் கொண்ட சில ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தங்களது பாடசாலைக்குச் சென்று வருகிறார்கள். பலர் மோட்டார் சைக்கிளுக்குப் பதிலாக துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துகிறார்கள். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் சிலர் துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்குச் செல்வதை ஆங்காங்கே காண முடிகின்றது.

அவ்வாறான ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. பெற்றோரின் ஆசீர்வாதங்களும் குவிகின்றன. மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்ட இவர்களே கற்பித்தலுக்குத் தகுதியானவர்கள் என்று பெற்றோர் வெளிப்படையாகவே பேசிக் கொள்கின்றனர். இருந்த போதிலும். தூர பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெட்ரோல் வழங்கப்படுகிறது. அதற்காக ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று ஆக 500 ரூபாவுக்கு மாத்திரமே பெட்ரோல் பெற்றுக் கொள்ள முடிகிறது. ஒரு லீட்டர் பெட்ரோலில் பாடசாலைக்குச் செல்வதென்பது முடியாத காரியமாகும்.

இதனால் பாடசாலைக்குச் செல்ல முடியாத துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டிருப்பதாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் மனக்கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

வி.ரி.சகாதேவராஜா...

(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...