இந்து மதம் உலகிற்கு அளித்த பெரும் பொக்கிஷம் யோகா

இந்துமதம் உலகத்திற்கு அளித்த பெரும் பொக்கிஷம் யோகா. மனதை கட்டுப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் யோகா மிக மிக அவசியமாகின்றது. யோகா செய்தவன் உலகை வெல்வான்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ. எம்.டக்ளஸ் தெரிவித்தார்.

கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்..

சிறு பிள்ளைகள் தொடக்கம் முதியவர்கள் வரை 1500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆன்மிக நிகழ்வில் காலை பொழுதில் பேசுவதில் பெருமையடைகிறேன்.

அம்பாறை மாவட்டத்தில் இந்து சமயம் சார்ந்த நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடந்து வருவதில் சந்தோஷம் அடைகிறேன்.

இராம கிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் ஆசியுரை ஆற்றுகை யில்...

எமது உடல் ஆரோக்கியமாகவும், எமது என்பு வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் அன்றே சொன்னார்.

மனதை கட்டுப்படுத்துவதற்கு யோகாசனம் மிகவும் பயனுள்ளது. யோகாவைப் பயின்றவர்கள் மனதைக் கட்டுப்படுத்தி உலகையே வெல்வார் என்றால் மிகையல்ல.

அறநெறி மாணவர்கள் சிறுவயதிலிருந்தே யோகாவை பயின்று கொண்டால் வாழ்க்கையில் சிறக்கும். ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வதற்கு இது உதவும் என்றார்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச யோகாசன தினம் (ஜூன் 21 ) கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மைதானத்தில் அண்மையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜெ. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது.

காரைதீவு குறூப் நிருபர் சகா


Add new comment

Or log in with...