பனங்காடு பட்டிநகர் கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சடங்கு

கண்ணகி வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகரில் குடிகொண்டுள்ள கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சடங்கு பெருந்திரளான மக்களின் அரோகரா வேண்டுதலின் மத்தியில் இடம்பெற்றது.

கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்றதும் முக்காவிய புகழ் பெற்றதும் பொற்புறா வந்த காவியம் பாடப்பட்டதுமான இவ்வாலயத்தின் திருக்குளிர்ச்சி திருக்கதவு திறக்கும் வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து விசேட அபிசேகமும் மூன்று கால பூஜைகளும் இடம்பெற்றன. அன்று இரவு கல்யாணக்கால் நடும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் திருக்குளிர்த்தியும் பக்தர்களின் நேர்த்திக் கடனும் பொங்கலும் நடைபெற்றதுடன், கவடாப்பிட்டி பிள்ளையார் ஆலய பொங்கல் மற்றும் ஐயனார், வைரவர், நாகேஸ்வரர் பூஜையுடன் நிறைவுற்றது.

திருக்குளிர்த்தியையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அக்கரைப்பற்று அன்புத் தோழர்கள் அமைப்பு புண்ணியமூர்த்தி நவனீதன் உள்ளிட்டவர்கள் மோர்ப்பந்தல் அமைத்து தாகசாந்தி ஏற்பாட்டினை மேற்கொண்டனர்.

அத்தோடு ஆலய நிருவாகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேவேளை ஆலயத்தில் விநாயகர் பொங்கல் வழிபாட்டிற்கான பூஜைகள் நடைபெற்றதன் பின்னர் பொதுமக்கள் பொங்கலிடும் வேலைகளில் ஈடுபட்டதுடன் திருக்குளிர்ச்சி வழிபாடுகள் ஆரம்பமாகின.

பரிவார ஆலயங்களுக்கான பூஜையைத் தொடர்ந்து கல்யாணக்கால் பந்தலுக்கான பூஜை நடைபெற்றதன் பின்னர் அம்மனை குளிர்ச்சி படுத்தும் பாடல்கள் பாடப்பட்டு குளிர்ந்தருளல் பூஜை இடம்பெற்றது.

அம்மன் அடியார்களுக்கு அருள் வழங்கும் வகையில் கல்யாணக்கால் பந்தலை சுற்றி ஆலய பூசகரால் வலம் கொண்டு செல்லப்பட்டாள்.

இதன்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அடியார்கள் குலவை சத்தத்துடன் ஆரோகரா எனும் வேண்டுதலையும் வானைப்பிளக்க வேண்டி நின்றனர்.

நிறைவாக அம்மன் மீது குளிர்ந்தருளச் செய்யப்பட்ட நீர் மக்கள் பக்தர்கள் மீது ஆலய பூசகரால் தெளிக்கப்பட்டதன் பின்னர் பூஜைகள் நிறைவடைந்தன.

ஆலய தலைவரும் வண்ணக்கருமான க.கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற திருக்குளிர்ச்சி வழிபாடுகளை ஆலய பூசகர் கு.ரவீந்திரநாதன் தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைத்தனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்


Add new comment

Or log in with...