எரிபொருள், போக்குவரத்து சிக்கல்; பிரதான நகர பாடசாலைகள் இவ்வாரமும் பூட்டு

- சிக்கலற்ற பாடசாலைகள் 3 நாட்கள் திறக்க நடவடிக்கை

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களிலுள்ள பாடசாலைகளை ஜூன் 27 முதல் ஜூலை 01 வரை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, போக்குவரத்து பிரச்சினை இல்லாவிட்டால், கிராமப்புற பாடசாலைகளை செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் நடாத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக, கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையாத நிலையில், எரிபொருள் விநியோகமானது வழக்கமான வகையில் மேற்கொள்ள முடியாத சிக்கல் நிலை உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய குறித்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக, அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடியதைத் தொடர்ந்து, ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான இவ்வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது குறித்து, நேற்றையதினம் (25) கல்வி அமைச்சு ஊடக அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது.

ஆயினும், நாளை திங்கட்கிழமை ஜூன் 27இல் ஆரம்பமாகும் வாரத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு சாத்தியமில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தற்போது அறிவித்தள்ளது.

எனவே கடந்த வாரம் மூடப்பட்டிருந்தது போன்று, ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் மேல் மாகாணத்தின் கொழும்பு வலயத்திலும் அதனை அண்டிய நகரங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களிலும் பாடசாலைகளை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வாரம் கிராமப்புற பாடசாலைகள் இடம்பெற்றது போன்று, மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிரமம் அற்ற பாடசாலைகளில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் பாடசாலைகளை நடாத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமம் காரணமாக இந்நாட்களில் பாடசாலைக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களுக்கு அவர்களது தனிப்பட்ட விடுமுறையாக பதிவு செய்ய வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயினும், இவ்வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்பட்டால், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, ஜூன் 27இல் ஆரம்பிக்கும் வாரத்தில் க.பொ.த. உயர் தரத்திற்கான தவணைப் பரீட்சைகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தால், அப்பரீட்சைகளை 2 வாரங்களுக்குப் பின்னர் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...