சர்வதேச உதவி கோரும் தலிபான்: உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்
தென் கிழக்கு பாகிஸ்தானில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தின் மீட்பு நடவடிக்கைகள் கடும் மழை, கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் போதிய வளங்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளன.
6.1 ரிச்டர் அளவில் கடந்த புதன்கிழமை பதிவான இந்த பூகம்பத்தை அடுத்து கட்டட இடிபாடுகளில் பலரும் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. இங்கு பெரும்பாலும் சேற்று மண்ணாலேயே கட்டடங்கள் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானின் சுகாதார கட்டமைப்பு முன்னர் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானில் ஆட்சியில் இருக்கும் தலிபான் நிர்வாகம் அதிக சர்வதேச உதவிகளை கோரியுள்ளது. தொலைத்தொடர்பு வலையமைப்புகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
“எம்மால் அந்தப் பகுதிகளை அடைய முடியாதிருக்கிறது. வலையமைப்புகள் மிக மோசமாக உள்ளன” என்று தலிபான் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதில் மோசமாக பதிக்கப்பட்ட பக்திகா மாகாணத்தின் தொலைதூர பகுதிகளுக்கு அவசர முகாம்கள் மற்றும் உணவு வழங்குவதில் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்த பூகம்பத்தின் மையப் பகுதிக்கு அருகில் இருக்கும் கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன. வீதிகள் மற்றும் தொலைபேசி கோபுரங்கள் சிதைந்து காணப்படுவதோடு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உயிர் தப்பியவர்கள் மற்றும் மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் சுமார் 1,500 பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆப்கானில் இடம்பெற்றிருக்கும் அதிக உயிரிழப்புக் கொண்ட பூகம்பம் ஆட்சியில் இருக்கும் தலிபான்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வெளிநாட்டு துருப்புகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர்.
கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் கடந்த புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டது.
ஆப்கான் ஏற்கனவே மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி அளிப்பதற்கு அரசினால் முடியாதிருப்பதாக மூத்த தலிபான் அதிகாரியான அப்துல் கஹர் பல்கி குறிப்பிட்டுள்ளார். இந்த அனர்த்தம் தொடர்பில் தமது நிறுவனம் முழுமையாக அணிதிரட்டப்பட்டிருப்பதாக ஐ.நா தலைவர் அன்டொனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு சுகாதார குழுக்கள், மருத்துவ விநியோகங்கள், உணவு மற்றும் அவசர முகாம்கள் அனுப்பப்பட்டிருப்பதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இரவு பெய்த கடும் மழையால் உணவுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீட்பாளர்கள் அங்கு வர சிரமத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் பக்தியா மாகாணத்திற்கான தகவல்துறை தலைவர் முஹமது அமீன் ஹுதைபா தெரிவித்துள்ளார்.
பக்தியாவின் கயான் மற்றும் பர்மால் மாவட்டங்களிலேயே அதி கம் பேர் உயிரிழந்துள்ளனர். கயானில் கிராமம் ஒன்று முழுமையாக அழிந்துள்ளது.
“ஒரு சத்தம் கேட்டது. எனது படுக்கை குலுங்க ஆரம்பித்தது” என்று உயிர் தப்பிய ஷபீர் என்பவர் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு கூறினார். “உட்கூரை கீழே இடிந்து விழுந்தது. நான் சிக்கிக் கொண்டேன், ஆனால் என்னால் வானத்தைப் பார்க்க முடிந்தது. எனது தோள்பட்டை பெயர்ந்துவிட்டது, எனது தலையிலும் காயம் ஏற்பட்டது, ஆனால் என்னால் வெளியே வர முடிந்தது. என்னைப்போல் என்னுடன் ஒரே அறையில் இருந்த எனது குடும்பத்தின் ஏழு அல்லது ஒன்பது பேர் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பூகம்பத்தை அடுத்து தொலைபேசி கோபுரங்கள் சேதம் அடைந்திருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாதுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமது உறவினர்களின் நிலை குறித்து பலருக்கு தெரியாதுள்ளது. ஏனென்றால் அவர்களின் தொலைபேசிகள் செயற்பாடதுள்ளன. எனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.
இதனை பல மணி நேரத்திற்கு பின்னரே தெரிந்துகொண்டேன். பல கிராமங்களும் அழிந்துவிட்டன” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பூகம்பத்தில் 3,000க்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன. கடந்த புதன்கிழமை இரவு வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 600 பேர் மீட்கப்பட்டிருப்பதாக பக்திகா மாகாண தலிபான்களின் மூத்த இராணுவ தளபதியின் செய்தித் தொடர்பாளர் முஹமது இஸ்மைல் முஆவியா குறிப்பிட்டுள்ளார்.
இதில் குறைந்தது 200,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிடுகிறது.
Add new comment