கைதான ரெட்டா உள்ளிட்ட 7 பேரில் 4 பேருக்கு பிணை

- 3 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பொலிஸ் தலைமையகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 7 பேரில் 4 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 09ஆம் திகதி கொழும்பு, கோட்டையிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி, அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காயம் விளைவித்தமை தொடர்பான வழக்கிற்கு அமைய குறித்த 4 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  ஜகத் மனுவர்ண, தம்மிக முனசிங்க, எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி ஆகிய 4 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ரெட்டா என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர,  ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகிய 3 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவசியமான 9 சந்தேகநபர்கள் தொடர்பில், கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் B அறிக்கை சமர்ப்பிக்கபட்டிருந்தது.

அதற்கமைய, நேற்றுமுன்தினம் (22) ரெட்டா என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர, ஜகத் மனுவர்ண, தம்மிக  முனசிங்க, ரத்கரவ்வே ஜினரத்ன தேரர், எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி ஆகிய 7 பேர் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் சரணடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...