சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 35 பேர் கைது!

- கைதானோர் 6 தொடக்கம் 56 வயதுடையவர்கள்
- திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி, நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள்

இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 35 பேரை ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (23) மாலை பாணந்துறை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிக் கப்பலை அவதானித்து சோதனையிட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையை மேற்கொண்ட ஐந்து பேர் உள்ளிட்ட 25 ஆண்கள், 4 பெண்கள், 6 சிறுவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த பல நாள் இழுவை படகின் எஞ்சின் தொழில்நுட்பக் கோளாறினால் மேலும் நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்றதாக இருந்தமை மேலதிக ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 தொடக்கம் 56 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆட்கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்யும் இவ்வாறான ஆள் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்து சட்டத்தின் முன் சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கோருகிறது.

பழமையான மற்றும் நீண்ட கடல் பயணத்திற்குப் பொருத்தமற்ற பல நாள் மீன்பிடி படகுகளே இவ்வாறான மனித கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாக தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறான படகுகள் மூலம் சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள முற்பட்டால் உயிருக்குப் பாரிய ஆபத்து ஏற்படும் எனவும் கடற்படை பொதுமக்களை எச்சரித்துள்ளது.


Add new comment

Or log in with...