குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட திட்டம்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டின் எல்லா மட்டத்திலுள்ள மக்களதும் வாழ்வில் தாக்கங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நெருக்கடியானது மக்களை மன உளைச்சலுக்கும் உட்படுத்தி இருக்கின்றது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் தோற்றம் பெற்றுள்ள இப்பொருளாதார நெருக்கடியின் விளைவான பொருட்களின் விலையேற்றமும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடும் இதற்கு அடிப்படையாக உள்ளன. இப்பொருளாதார நெருக்கடி மக்களுக்கு தாக்கமாகவும் பாதிப்பாகவும் மாத்திரமல்லாமல், சுமையாகவும் அமைவதைத் தவிர்ப்பதில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.

இவ்வாறான நிலையில் பொருளாதார கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு பண ரீதியில் நிவாரணம் அளிக்கும் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணக் கொடுப்பனவை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 'இம்மாதம் முதல் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு மாதா மாதம் ரூபா 5000.00 வீதம் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ள பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார, 'இத்திட்டத்திற்கென உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதியுதவி வழங்கியுள்ளன' எனக் கூறியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ள மக்களுக்கு இது ஒரு ஆறுதலான நடவடிக்கையாக அமையும். அதேநேரம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்தியபடி செயற்பட்டுக் கொண்டிருப்பதை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினால் பணவீக்கம், எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, பொருட்களின் விலையேற்றம் என்பன பெரிதும் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் நாட்டின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்த மக்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளனர். பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்திருக்கின்றனர். அன்றாட உணவுக்காக பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளவர்களும் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.

என்றாலும் இவ்விதமான நெருக்கடிகளுக்கு மக்கள் உள்ளாவதைத் தவிர்ப்பது தொடர்பில் ஆரம்பம் முதல் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பலவாறான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் தற்போது இந்த நிதி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாட்டில் கொவிட் 19 தொற்று பதிவாகத் தொடங்கியது. அதன் காரணத்தினால் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுமையாக முடக்கப்பட்டது. இதன் விளைவாக குறைந்த வருமானம் பெறுபவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு அன்றும் முகம் கொடுத்தனர். அச்சமயமும் மக்களின் நலன்கள் குறித்து கவனம் செலுத்திய அரசாங்கம், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அன்றும் மாதாமாதம் ரூபா 5000.00 வீதம் கொடுப்பனவு பெற்றுக் கொடுத்தது. முதல் இரண்டு மாதங்களும் நாடெங்கிலுமுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், அதன் பின்வந்த காலப்பகுதியில் அந்தந்தப் பிரதேசங்களில் கொவிட் 19 தொற்று பரவுதல் கட்டுப்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இக்கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு குறைந்த வருமானம் பெறும் மக்களின் நலன்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சூழலில் தற்போது இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது. தற்போதைய சூழலில் இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய திட்டமாகும்.

ஆகவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கும் இந்நெருக்கடி மக்களுக்கு சுமையாக அமைவதை தவிர்ப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அது நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி கட்சி நலன்களுக்கு அப்பாலானதாக அமைய வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...