5 ஆவது போட்டி நாளை கொழும்பில்

இலங்கை அணிக்கு வரலாற்று ஒருநாள் தொடர் வெற்றி

அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 04 ஓட்டங்களால் திரில் வெற்றியினைப் பதிவு செய்தது. ஐந்தாவதும் இறுதியுமான போட்டி நாளை வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளது. இன்னும் இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இலங்கை அணி 3-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

அத்துடன் இந்த ஒருநாள் தொடர் வெற்றியானது கடந்த 30 வருடங்களில் இலங்கை அணிக்கு தமது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக கிடைத்த முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் வெற்றியாகவும் மாறியிருக்கின்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச்ஞ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 2-1 என முன்னிலை அடைந்திருக்க இன்றைய நான்காவது ஒருநாள் போட்டி முக்கியத்துவம் கொண்டதாக இருந்த காரணத்தினால் தீர்மானம் கொண்ட இந்தப் போட்டிக்காக இலங்கை அணியில் காயமுற்ற வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவிற்குப் பதிலாக வனிந்து ஹஸரங்க அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய அணிக்குழாத்தில் பேட் கம்மின்ஸன், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்ஸனிற்கு பதிலாக உள்வாங்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து நாணயச் சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே நெருக்கடி உருவாக்கினர். இதன்படி இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக களம் வந்த நிரோஷன் டிக்வெல்ல கிளன் மெக்ஸ்வெலின் பந்துவீச்சில் வெறும் ஒரு ஓட்டத்துடன் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஓய்வறை நடந்தார்.

இதன் பின்னர் இலங்கை அணியின் வெற்றியினை மூன்றாவது ஒருநாள் போட்டியில் உறுதி செய்த குசல் மெண்டிஸ் (14) மற்றும் பெதும் நிஸ்ஸங்க (13) ஆகியோரது விக்கெட்டுக்களும் அவர்கள் இருபது ஓட்டங்களைக் கூட தாண்டியிராத நிலையில் பறிபோனது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக பொறுப்பான முறையில் துடுப்பாடிய தனன்ஞய டி சில்வா மற்றும் சரித் அசலன்க ஆகியோர் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கியதோடு இந்த இணைப்பாட்டத்திற்குள் இரண்டு வீரர்களும் அரைச்சதமும் தாண்டியிருந்தனர். தொடர்ந்து 101 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. மிச்சல் மார்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த தனன்ஞய டி சில்வா தன்னுடைய 8ஆவது ஒருநாள் அரைச்சதத்தினை இப்போட்டியில் பதிவு செய்து 61 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்து ஓய்வறை நடந்தார்.

இதனை அடுத்து புதிய துடுப்பாட்டவீரராக களம் வந்த அணித்தலைவர் தசுன் ஷானக்க துரதிஷ்டவசமான ரன் அவுட் ஒன்றுடன் 04 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று ஆட்டமிழக்க இலங்கை மீண்டும் தடுமாற்றமான நிலையொன்றுக்கு சென்றது. இந்த சந்தர்ப்பத்தில் புதிய துடுப்பாட்டவீரராக களம் வந்த துனித் வெல்லாலகே இலங்கை அணியின் 6ஆம் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் (57) ஒன்றினை பெற்றுக்கொடுத்த பின்னர் 19 ஓட்டங்களுடன் மெதிவ் குஹ்னமேனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சரித் அசலன்க ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய கன்னி சதத்தினைப் பதிவு செய்ய, வனிந்து ஹஸரங்கவும் பின்வரிசை வீரராக பெறுமதியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சில துரதிஷ்டவசமான ரன் அவுட்கள் மூலம் 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி 258 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க 106 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 110 ஓட்டங்களை எடுத்திருந்தார். அத்துடன் சரித் அசலன்க ஐந்தாம் இலக்க துடுப்பாட்ட வரிசையில் ஆடி ஒருநாள் போட்டியொன்றில் சொந்த மண்ணில் அதிக ஓட்டங்கள் பெற்ற இலங்கை துடுப்பாட்ட வீரராகவும் சாதனை படைத்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற வனிந்து ஹஸரங்க 21 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் மெதிவ் குஹ்னமேன், பேட் கம்மின்ஸ் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 259 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய அவுஸ்திரேலிய அணி தமது பதில் துடுப்பாட்டத்தினைத் தொடங்கியது.

அவுஸ்திரேலிய அணிக்காக ஆரம்பவீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் களம் வந்தனர். எனினும் போட்டியின் மூன்றாவது ஓவரில் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டினை சாமிக்க கருணாரட்ன வீழ்த்தினார். அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக ஆரோன் பின்ச் ஓட்டமேதுமின்றி எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டு ஓய்வறை நடந்தார்.

ஆரோன் பின்ச்சின் விக்கெட்டின் பின்னர் மிச்சல் மார்ஷ் – டேவிட் வோர்னர் ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் (63) ஒன்றை பெற்ற போதும் துனித் வெல்லாலகே இந்த இணைப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார். வெல்லாலகேவின் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த மிச்சல் மார்ஷ் 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மிச்சல் மார்ஷின் விக்கெட்டின் பின்னர் அவுஸ்திரேலிய அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த போதும் டேவிட் வோர்னர் அரைச்சதம் பெற்று வெற்றி இலக்கிற்கான பயணத்தில் தனது தரப்பு இருப்பதனை உறுதி செய்தார்.

டேவிட் வோர்னர் சதத்தினை நெருங்கிய வேளை தனஞ்சய டி சில்வா தனது அபார சுழல் மூலம் அவரின் விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதனால் சதம் பெறாமல் டேவிட் வோர்னர் 12 பௌண்டரிகள் அடங்கலாக 99 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தன்னுடைய 24ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு மைதானத்தினை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. வோனரின் விக்கெட்டின் பின்னர் அவுஸ்திரேலிய அணி 192 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதன் பின்னர் பட் கம்மின்ஸ், மெதிவ் குஹ்னமேன் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய போதும் அவர்களின் முயற்சி இலங்கை பந்துவீச்சாளர்கள் காரணமாக வீணாக அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 254 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டிய பேட் கம்மின்ஸ் 35 ஓட்டங்கள் எடுக்க, மெதிவ் குஹ்னமேன் 15 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் தனன்ஞய டி சில்வா, சாமிக்க கருணாரட்ன மற்றும் ஜெப்ரி வெவன்டர்செய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருக்க, மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் சரித் அசலன்க தெரிவானார்.


Add new comment

Or log in with...