அமரகீர்த்தி அத்துகோரள கொலை; 32 வயதான மற்றுமொரு சந்தேகநபர் கைது

- சம்பவம் தொடர்பில் இதுவரை 32 பேர் விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 09 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் கலகம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த தினத்தில் நிட்டம்புவ நகரில் கலகக்காரர்கள் தாக்குதலுக்குள்ளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை மற்றும் அவருக்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவரை தாக்குதல் மேற்கொண்டு துப்பாக்கி சூட்டின் மூலம் கொலை செய்தமை தொடர்பில் நேற்றைய தினம் (23) நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான கம்பஹா மாதெல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த கொத்தனார் (மேசன்) பணியில் ஈடுபடும் நபர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சந்தேகநபரை இன்றைய தினம் (23) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை தொடர்பில் இதுவரை 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Add new comment

Or log in with...