காணி பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வியாழேந்திரன் எம்.பியின் சகோதரர் கைது

- ஜூலை 04 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியிலுள்ள காணியொன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவர் (21) கைது செய்யப்பட்டனர்.

ஹோட்டல் ஒன்றில் காணி உரிமையாளரிடமிருந்து பணத்தை வாங்கும்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை பிரதேசத்தில் கடந்த 02 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணி பிரித்து விற்பனை செய்யப்பட்டு அதில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த காணியை வாங்கியவர்கள் வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு பிரதேச சபைக்கு சென்றால் அங்கு கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சகோதரரும் அவர்களிடம் இந்த காணி போலி என கூறி அனுமதி வழங்க முடியாதென தெரிவித்துள்ளனர்.

காணி விற்பனை செய்த காத்தான்குடியை சேர்ந்தவரிடம் காணியை வாங்கிய மக்கள் சென்று இந்த காணி உறுதி போலியானது. அனுமதிவழங்க முடியாதென இவர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து காணியை விற்பனை செய்தவர் முன்னாள் அமைச்சரின் சகோதரரிடம் காணியை சட்டரீதியாக நாங்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கி எமது பதிவு செய்யப்பட்ட கம்பனி ஊடாக இதனை சிறு சிறு பகுதிகளாக விற்பனை செய்துவருவதாக தெரிவித்தார். அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து பிரதேச சபையில் அனுமதி வழங்க 20 இலட்சம் ரூபா இலஞ்சமாக வழங்குமாறு அவரிடம் கோரியுள்ளனர். இவ்வாறான நிலையில் காணியை விற்பனை செய்த காத்தான்குடியைச் சேர்ந் நபர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு அறிவித்ததன் பிரகாரம் அவர்களின் ஆலோசனையின்படி சம்பவதினமான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு இலஞ்சம் கோரியவர்களிடம் கோரிய 15 இலட்சம் ரூபா பணத்தை தருவதாக தெரிவித்து மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வருமாறு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ஹோட்டலுக்கு சென்று 15 இலட்சம் ரூபா பணத்தை அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் வழங்கினர். இருவரும் இணைந்து காணி உரிமையாளரிடம் பெற்ற பணத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு மாறுவேடத்திலிருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்ற பணத்தையும் மீட்டு மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காணி விவகாரம் தொடர்பில் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் சகோதரர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

இவர்கள் இருவரையும் ஜூலை 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறே நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

மட்டக்களப்பு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...