விம்பம் அமைப்பின் பணிகள் தொடர்ந்தும் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட வேண்டும்

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு

லண்டன் விம்பம் அமைப்பின் ஆதரவுடன் மலையக இலக்கிய மாநாடு மிகச் சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல நாடுகளிலிருந்தும் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டதோடு, ஓரு முழு நாள் நடந்தேறிய நிகழ்வுகளின் போது ஏழு அமர்வுகளில் ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் உள்ளிட்ட பல மலையக இலக்கியங்களை பல எழுத்தாளர்களும், இலக்கிய ஆளுமைகளும், சமூக ஆர்வலர்களும் இங்கு அறிமுகமும் விமர்சனமும் செய்தனர்.

முதலாவது அமர்வை காத்தாயி முத்துசாமி நினைவாக மு நித்தியானந்தன் அவர்கள் தலைமை தாங்கி, காத்தாயி முத்துசாமி பற்றி அறியப்படாத சரித்திரத்தை எடுத்துரைத்து இவ்வரங்கை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு அவர் பி. பெரியசாமியின் தோட்டத் தொழிலாளரின் வீரப்போராட்டம் குறித்தும் சுருக்கமாக ஒரு விமர்சனமும் செய்திருந்தார். இவ்வரங்கில் நோர்வேயிலிருந்து சமுகமளித்திருந்த ந. சரவணன் மல்லியப்புசந்தி திலகரின் 'மலைகளைப் பேச விடுங்கள்' உரை பற்றியும் , வரதன் கிருஷ்ணாவின் 'வெந்து தணியாத பூமி' குறித்து எம்.பௌசர் அவர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.

முதலாவது அரங்கின் நாயகி, காத்தாயி முத்துசாமியை நினைவு கூரும் வகையில் காத்தாயி முத்துசாமியின் துயர் படிந்த வரலாற்றை வெளிப்படுத்தினர். சாம் பிரதீபனின் நெறியாள்கை, எழுத்துருவில் ரஜித்தா பிரதீபன் உட்பட பல கலைஞர்கள் இணைந்து ' காத்தாயி காதை' எனும் குறுநாடகத்தின் வாயிலாக பார்வையாளர்களின் மனங்களில் படியும்படி வெளிப்படுத்தியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து இர. சிவலிங்கம் அரங்கிற்கு செல்லத்தம்பி சிறிக்கந்தராசாவும், கோகிலம் சுப்பையா அரங்கிற்கு மீனாள் நித்தியானந்தனும், சோ. சந்திரசேகரம் அரங்கிற்கு க. ஆதவனும், சி. வி.வேலுப்பிள்ளை அரங்கிற்கு வி சிவலிங்கமும், தமிழோவியன் அரங்கிற்கு மாதவி சிவலீலனும், சாரல் நாடன் அரங்கிற்கு நா. சபேசனும் தலைமை தாங்கி இங்கு கலந்து கொண்ட எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் வாயிலாக 26 மலையக நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் அறிமுகமும் விமர்சனமும் செய்வதற்கு உதவி புரிந்தனர். நவரட்ணராணியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் இம்மாநாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட சிறுகதைத் தொகுப்பு, நாவல், கவிதை, கூத்து, அரசியல், பொருளாதார சட்டவியல் சார்ந்த பல்துறைகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களை அழகுபடுத்தின.

இந்த மாநாட்டில் பேசப்பட்ட அனைத்து மலையக படைப்பிலக்கியங்கள் குறித்த விமர்சனங்களும் உரைகளும் கூடிய விரைவில் நூல் வடிவம் பெற இருப்பதும் இம்மாநாட்டின் தனிச்சிறப்பாக இருக்கிறது. மலையக இலக்கியம் பற்றி இன்னுமே அதிகம் பரவலாக அறிந்து கொள்ளப்படாத ஒரு கால கட்டத்தில் இவ்வாறான முன்னெடுப்புகள் இவ்வகை அரிய படைப்புகளை பல வாசகர் மட்டத்திற்கும் எடுத்துச் செல்லும் என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.

ஒடுக்கப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலார்களின் வலிகளும், அவர்கள் அரசியல், சமூக, பொருளாதார, குடியியல் சார்ந்த தளங்களில் எதிர்நோக்குகின்ற சவால்களும் இந்நூல்களின் வழியாக பலதரப்பட்ட மக்களையும் சென்றடைய வேண்டும், அவர்கள் மத்தியில் மலையக மக்களின் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வொன்று ஏற்பட வேண்டும் என்பதே இங்கு கலந்து கொண்ட அனைவரினதும் ஏகோபித்தகுரலாக இருந்ததை அவர்கள் உரையிலிருந்து கணிப்பிடக் கூடியதாய் இருந்தது.

இந்நாளை ஒரு மிக மகிழ்ச்சிக்குரிய மறக்க முடியாத நாளாக மாற்றியிருந்தது இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் -விம்பம் அமைப்பின் பலம் என்றுதான் கூறவேண்டும். விம்பம் தொடர்ந்தும் இவ்வாறான காத்திரமான இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும், உச்சம் தொட வேண்டும் என்று நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம்.

பூங்கோதை...


Add new comment

Or log in with...