இந்திய அரசின் நிவாரணப்பொருட்களை பகிர்ந்தளிப்பதில் முறைப்பாடு

- இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் உடனடி விசாரணை

அப்புத்தளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிட்ராத்மலை தோட்டத்தில் இந்தியா அரசினால் நிவாரணமாக வழங்கப்பட்ட பால்மாவை பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டில் போக்குவரத்து செலவுக்கென பிரதேச சபை சேர்ந்த சிலரால் 50 ரூபா பொதுமக்களிடம் அறவிடும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு எதிராக ஆளுனரின் செயலாளரிடம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பதுளை மாவட்ட செயலாளர் அப்புத்தளை பிரதேச செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் விசாரணை அறிக்கையும் கோரியுள்ளார்.

இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் உணவு ஆணைக்குழுவின் ஊடாக மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அந்ததந்த மாவட்டங்களில் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக மக்களை சென்றடைய இ.தொ.காவால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா அரசின் அனுசரனையில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை துறைமுகத்திற்கு வந்தடையும் வரை தேவையான ஏற்பாடுகள் இந்திய அரசு வழங்கி இருந்தது.

துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை விடுவித்து (clearance) ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக 400 மில்லியன் ரூபாவிற்கு மேலதிகமான செலவுகள் திறைசேரியின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொருட்கள் மக்களின் வீட்டு வாசல் வரை கொண்டு சேர்க்கப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மேலதிகமாக நிதி வசூலித்தால் எவரும் கொடுக்க வேண்டாம் எனவும், அவ்வாறு நிதி வசூலிப்பவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...