இன்றைய அவல வாழ்க்கைக்கு தமிழர்கள் பழக்கப்பட்டவர்கள்

காரைதீவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உரை 

மக்கள் உணவுக்கு கையேந்தி நிற்கும் துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. இன்று நாட்டில் தோன்றியுள்ள துர்ப்பாக்கிய நிலைமை இக்காலத்தில் முடிவுக்கு வரப் போவதில்லை. இது தீர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். இது போன்ற அவல வாழ்வுக்கு தமிழ் மக்கள் முன்னரே பழக்கப்பட்டவர்கள். தமிழர்கள் வருவதை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். 

இவ்வாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் காரைதீவில் வைத்துத் தெரிவித்தார். 

தமிழீழ விடுதலைக் கழகத்தின் அம்பாறை மாவட்ட முன்னாள் முக்கியஸ்தர் அமரர் மகாதேவன் சிவனேசனின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வு காரைதீவு விபுலானந்த மைதானத்தில்  கழகத்தின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர்

பி. ரவிச்சந்திரன் சங்கரி தலைமையில் நடைபெற்றது. முதலாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காரைதீவு ஜோலி கிங்ஸ் அணியினரை எதிர்த்து போட்டியிட்ட வீரமுனை விஷ்ணு அணியினர் வெற்றி வாகை சூடி இருந்தனர். 

பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

"இன்று நாட்டில் மிகவும் மோசமான பொருளாதார சீரழிவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மக்களும் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலைமை தோன்றி இருக்கின்றது. இது இன்று நாளை முடிவடையப் போவதில்லை. 

இதேவேளை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கிறோம். மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாது விட்ட காரணத்தினால் நாடே சீரழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களது பிரச்சினைகள் நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டும்.  

தமிழ் மக்களது கனவு நிறைவேற வேண்டும். தமிழ் மக்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து நல்லதொரு தீர்வு காணப்பட வேண்டுமானால் அடுத்த சந்ததிக்கு இந்த விடயம் ஏற்றி வைக்கப்படவேண்டும். இப்படியான நிகழ்வுகள் தொடராக நடக்க வேண்டும். 

எண்பதுகளில் எமது கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக செயல்பட்டவர் இந்த மண்ணைச் சேர்ந்த  சிவனேசன். அவர் சிறப்பாக செயல்பட்டார். இளைஞர்களிடையே மிகுந்த துணிவை ஏற்படுத்தியவர். அவரது ஞாபகார்த்தமாக இங்கே தற்போதைய அமைப்பாளர் சங்கரி ஏற்பாடு செய்த இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் உண்மையிலேயே முக்கியத்துவம் மிகுந்தவை".  இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் க. சிவனேசன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் த.கஜதீபன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், உதவி கல்விப் பணிப்பாளர் வி.ரி சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினார். திருமதி சிவனேசனும் கலந்து கொண்டார்.

வி.ரி.சகாதேவராஜா


Add new comment

Or log in with...