மருந்து தட்டுப்பாடு ஏற்படுமென எவரும் அச்சமடைய வேண்டாம்

- போதியளவு கொள்வனவுக்கு அரசு நடவடிக்கை

மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியபோதும் சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்று தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதாரத்துறை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையின் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காலத்தில் சுகாதாரத் துறையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அதனை கட்டுப்படுத்துவதற்கு வெற்றிகரமாக செயற்பட்டனர். அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உரிய வகையில் கொள்வனவு செய்து அவற்றை முகாமைத்துவம் செய்யவும் எம்மால் முடிந்தது.

அந்த வகையில் நாட்டில் தற்போது நிலவும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஆகியவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...