மலையக தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டும்

- சபையில் ஜீவன் தொண்டமான் எம்.பி

மலையக பெருந்தோட்டங்களில் இயங்கும் வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை முறையாகப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அந்த வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.

மேற்படி வைத்தியசாலைகளில் முறையான உட்கட்டமைப்பு வசதிகள் கிடையாது என்பதை சுட்டிக்காட்டிய அவர், அனைத்து தோட்டங்களிலும் வைத்தியசாலைகள் உள்ள போதும் அவை அடிப்படை வசதியற்றே காணப்படுகின்றன என்றும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றை முறையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று சுகாதாரத் துறை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

பெருந்தோட்ட மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள் தன்னிச்சையாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வெகுவாக அதிகரித்து வருகின்றனர். எனினும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை, மலையகத் தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...