"யோகா ஒரு தனிநபருக்கானதல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்குமானது"

- கொழும்பில் 8ஆவது சர்வதேச யோகா தினம்

8ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 2022 ஜூன் 21ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் (உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவு) ஆகியவை இணைந்து பாரிய நிகழ்வொன்றை ஒழுங்கமைத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரசன்னத்துடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன்,  கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேம ஜயந்த,  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கா, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்ஹே  பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், பழனி திகாம்பரம், எம்.உதயகுமார் மற்றும்  ஏனைய பேராளர்கள் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கலந்து சிறபித்தனர்.

 

 

மேலும் பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், அத்துடன் இலங்கை முழுவதிலிமிருந்து பல நூற்றுக்கணக்கான யோகா ஆர்வலர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

8ஆவது சர்வதேச யோகா தினத்திற்கான தொனிப்பொருளாக “மனிதத்துக்கான யோகா” அமைந்துள்ளது. இந்தியாவில் யோகா தினத்தின்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “யோகா ஒரு தனிநபருக்கானதல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்குமானது” என்று குறிப்பிட்டார்.

யோகா சமூகம், உலகம் மற்றும் பிரபஞ்சத்திற்கு அமைதியைக் தருகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியசெய்தியில் உடல், உள மற்றும் சமுதாயநலன்களை அடைவதற்கான விலைமதிப்பற்ற புராதன இந்திய பாரம்பரியமே யோகா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விவரித்துள்ளார்.

குறிப்பாக கொவிட் காலத்தில் யோகாவின் பாரியளவிலான பலன்களை கவனத்தில் கொள்ளும்போது இந்த ஆண்டிற்கான தொனிப்பொருள் அதற்கு அர்ப்பணிப்புடையதாகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவின் தலைமை குருவான அதி வணக்கத்துக்குரிய கலாநிதி மைதபே விமலசேர தேரர், அனைவருடைய ஒட்டுமொத்த நலன்களுக்காகவும் புத்த பெருமானின் அருளை வேண்டி நிகழ்த்திய பிரார்த்தனையுடன் சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

அஷ்டாங்க யோகா மந்திர், அஷ்டாங்க யோகா லங்கா, ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம், பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையம், ஹதா யோகா நிலையம்,  மனித மகிமைக்கான நிலையம், ரித்மிக் யோகா அக்கடமி, வாழும் கலை, தெய்வீக வாழ்வுக்கான யோகா, இராமகிருஷ்ண மிஷன், செத்சதா யோகா நிகேதனயன, மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் போன்றவற்றின் யோகா நிபுணர்கள் புத்துணர்ச்சியூட்டும் யோகா மற்றும் தியான அமர்வுகளை இங்கு நடத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வானது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒன்றிணைவுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஆஷாதிகா அம்ரித் மஹோத்சவ் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவும் அமைகின்றது.

யோகாவின் ஒன்றிணைக்கும் சக்தியினை சுட்டிக்காட்டுவதற்காக உலகம் முழுவதும் நடைபெறும் யோகா நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்திய அரசின் ‘காடியன் ரிங்’ (Guardian Ring) முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு நடைபெறும் யோகா நிகழ்வுகள் அனைத்தும் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால் ஜூன் மாதத்தில் பல்வேறு தொடர் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. பாடசாலைகள், பிரிவேனாக்கள், பல்கலைக்கழகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்கள், கலாசார அமைப்புகள், மற்றும் புனித கங்காராமய விகாரை, ஶ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரம் கோயில், பரமதம்ம சைத்திய பிரிவேனா, சிவ விஷ்ணு யோகா பீடம் ISKON போன்ற மத மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன. கொழும்பிலுள்ள காலி முகத்திடல் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பருத்தித்துறை ஆகிய முக்கியத்துவமிக்க இடங்களிலும் யோகா செயலமர்வுகள் நடத்தப்பட்டிருந்தன. இவற்றிற்கு மேலதிகமாக நாடளாவிய ரீதியிலான யோகா அடிப்படையிலான ஆசனங்கள் குறித்த போட்டி ஒன்றும் மெய்நிகர் மார்க்கம் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...