21ஆவது திருத்தம் தோல்வி 22ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு

- அனைவரது ஒத்துழைப்புடனும் அரசு நிறைவேற்றும்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தோல்வியடைந்துள்ளதால் வெற்றியளிக்கக் கூடிய வகையில் 22 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரது ஒத்துழைப்புடனும் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, 21 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்தது. அது நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. சபாநாயகர் அதனை அறிவித்தார். அதனை செயற்படுத்த தடைகள் உள்ளன. அவற்றில் அநேகமானவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.அவ்வாறாயின் 21 ஆவது திருத்தம் வெற்றியளிக்காது. அதனால் தான் 22 ஆவது திருத்தமாக அதனை அரசாங்கம் முன்வைத்துள்ளது. தோல்வியடையும் யோசனையாக அன்றி வெற்றியளிக்கும் திருத்த யோசனையாக 22 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றித் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய நிலைமைகள் தோன்றியுள்ளமையால், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நன்மைபயக்கும் பிரிவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையின் கீழ் தற்போது முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்குமிடையில் அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் கூட்டாகப் பொறுப்புக் கூறும் அமைச்சரவைக்கும் மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கும் ஒருசில அதிகாரங்களை ஒப்படைக்கும் வகையிலும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது பொருத்தமானதென அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள அடிப்படைச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...