ஜோன்ஸ்டன் தாக்கல் செய்த கைதாவதை தடுக்கும் மனு நிராகரிப்பு

தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு (Writ Petition) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (21) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் புதிய உத்தரவுகளை பிறப்பிக்க நீதவான் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரரான ஜோன்ஸ்டன் பெனாண்டோ தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் சரணடையவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்ததோடு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்றில் சரணடையுமாறு வழங்கிய உத்தரவு காரணமாகவே அவர் நீதவான் முன்னிலையில் முன்னிலையாகியதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

கடந்த மே 09 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி 'மைனா கோகம' மற்றும் காலிமுகத்திடல் 'கோட்டா கோகம' போராட்ட கள்ங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையிலான வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சந்தேகநபராக தாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில்  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தம்மை கைது செய்யத் தயாராகி வருவதாகவும், இது சட்டத்திற்கு முரணானது என்றும் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...