பௌத்த மத கற்றல் மற்றும் நடைமுறையை மேம்படுத்தவென புரிந்துணர்வு ஒப்பந்தம்

பௌத்த மதக் கற்றல், நடைமுறை, புனித யாத்திரை, ஞானம் ஆகிய துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவின் புது டில்லியைத் தளமாகக் கொண்டுள்ள சர்வதேச பௌத்த கூட்டமைப்பும் மொங்கோலியாவின் காண்டன் டெக்சென்லிங் மடாலயமும்   கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து புத்தபெருமானின் புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள் மொங்கோலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள சமயம் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் காண்டன் டெக்சென்லிங் மடாலயத்தில் கைச்சார்த்திடப்பட்டிருக்கின்றது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் பிரதிப் பொதுச்செயலாளர் கென்சூர் ஜாங்சுப் சோடன் ரிம்போச்சேவும் மொங்கோலியாவின் காண்டன் டெக்சென்லிங் மடாலயத்தின் டா லாமா பயம்பஜாவ் குங்குர்வும் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின் படி, இந்தியா, மங்கோலியா உட்பட ஆசியாவின் அனைத்து பகுதிகளிலும்  பௌத்த மத மரபுரிமை தொடர்பிலான கூட்டு ஆராய்ச்சி திட்டங்களும் செயல்பாடுகளும் மேம்படுத்தப்படும்.  அத்தோடு சர்வதேச பௌத்த கூட்டமைப்பும் காண்டன் டெக்சென்லிங் மடாலயமும்  மதங்களுக்கு இடையேயான உரையாடல் பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் புரிதலை வளர்ப்பதிலும் ஈடுபடுவதிலும் செயல்படும் என்றும் பௌத்த மதத்திற்கும் நவீன அறிவியலுக்கும் இடையில் நிலையான உரையாடலை எளிதாக்குவதற்கும் இணைந்து செயற்படுவதெனவும்  இப்புரிந்துணர்வு  உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உலகெங்கிலுமுள்ள பௌத்த நடைமுறைகள், பாரம்பரியங்கள், மரபுரியமைத் தளங்கள், நினைவுச்சின்னங்கள் என்பவற்றை அடையாளம் கண்டு பாதுகாப்பதிலும்  பௌத்த கலாசார சொத்துக்களை ஆய்வுகளுக்கு உட்படுத்துவதிலும்  இரு தரப்பினரும் ஈடுபடவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து  ட லாமா பயம்பஜாவ் குங்குர் குறிப்பிடுகையில், 'இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும் பௌத்த மத்தை உலகில் பெரிதும் பரப்ப  உதவும்' என்றும் கூறினார்.

சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் பிரதிப் பொதுச்செயலாளர் கூறுகையில், 'இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டின் கீழ் புத்தபெருமானின் நினைவுச்சின்னங்களை மொங்கோலியாவுக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். காண்டன் டெக்சென்லிங் மடாலயம் எங்கள் அமைப்பின் ஒரு பகுதியாகும் என்றார்.

இந்தியாவிருந்து விஷேட விமானத்தில் மொங்கோலியத் தலைநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் ஆன்மீக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் 11 நாட்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...