கதிரான பாலத்திலிருந்து வீசப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு

- பாட்டியினால் தேகம் அடையாளம் காணப்பட்டது

கடந்த புதன்கிழமை (15) வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் களனி ஆற்றிற்குள் தாயினால் வீசப்பட்ட 5 வயது சிறுவனின் சடலம் வைக்கால கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வத்தளை, ஹெந்தலை பிரதேசத்தை சேர்ந்த 42 வயான குறித்த பெண், கடந்த புதன்கிழமை (15) இரவு ஊன்று கோலுடன் கதிரான பாலத்திற்கு அருகில் வந்து, தனது 5 வயது குழந்தையை களனி கங்கைக்குள் வீசிவிட்டு, தானும் கங்கைக்குள் குதிக்க முயன்ற நிலையில், பிரதேசவாசிகள் அவரை தடுத்து, அப்பகுதியில் வீதித் தடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிரந்த பொலிஸ் அதிகாரியிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து காணாமல் போன 5 வயது சிறுவனை தேடும் நடவடிக்கையை கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார்  மேற்கொண்டு வந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவனின் சடலம் நேற்று (17) பிற்பகல் வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைக்கால கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் குறித்த சிறுவனின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சடலத்தின் புகைப்படத்தை வத்தளையில் வசிக்கும் பாட்டியிடம் காண்பித்து பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

குறித்த சிறுவன் ஆற்றின் நடுப்பகுதிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்பதால் தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம் என தெரிவித்த அவர்,

இதனைத் தொடர்ந்து, சட்ட ரீதியான நடவடிக்கைக்காக மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சிறுவனின் சடலத்தை நேரில் சென்று அடையாளம் காண்பிக்க, வத்தளை பொலிஸார் சிறுவனின் பாட்டியை அங்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த பெண்ணுக்கு ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, தனது உடலில் ஏற்பட்டுள்ள கடுமையான உபாதை மற்றும் குழந்தையை வளர்ப்பதற்கு போதிய வருமானம் இல்லாமை காரணமாக, இருவரும் உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333

Add new comment

Or log in with...