நாமக்கல் என்றதும் இலக்கியவாதிகளின் நினைவுக்கு வருபவர் சின்னப்ப பாரதி

இம்மாதம் 13 ஆம் திகதி அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி கிடைத்த போது, அவர் குறித்த நினைவுகள் மனதில் எழுந்தன. இறுதியாக 2013 ஆம் ஆண்டு அவரை அவரது ஊரில்தான் சந்தித்தேன். அதற்கு முன்னரும் அங்கு சென்று திரும்பி அவர் பற்றி எழுதியிருக்கின்றேன்.

நமக்கல்லில் அவரைத் தேடிச் செல்லும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அவரது அந்த செல்லம்மாள் இல்லத்தின் வாசலில் ஒரு புதிய அனுபவத்தை எதிர்கொள்வார்கள்.

நான் முதல் தடவை நாமக்கல் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கே நின்ற ஒரு ஓட்டோ சாரதியிடம், அவரது பெயரைச் சொன்னதும், “ ஏறுங்க சார்“ என்று மாத்திரம்தான் சொன்னார்.

அந்த இல்லத்தை நெருங்கும் போது, அந்த ஓட்டோவின் ஒலி கேட்டு விரைந்து வாசலுக்கு வந்தார் சின்னப்ப பாரதி. ஓட்டோ சாரதிக்கு நான் பணம் கொடுப்பதற்கு முன்பே அவர் கொடுத்து அனுப்பி விட்டார்.

தன்னைத் தேடி ஓட்டோவில் வரும் எவருக்கும் சின்னப்ப பாரதியே சாரதிக்குரிய பணத்தை கொடுத்து விடுவார். அங்கு பேரம் பேசுதல் நடக்காது. அவ்வாறு சாதாரண ஓட்டோ சாரதிகளுடனும் தோழமையை பேணியவர்தான் சின்னப்ப பாரதி.

இலங்கையில் நாம் 2011 ஜனவரியில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக தமிழகத்திலிருந்து குரல் ஒலித்த வேளையில், அதனை அசட்டை செய்து விட்டு மனசாட்சியின் பேரில் கலந்து கொண்டவர்தான் சின்னப்ப பாரதி.

ஈழத்து இலக்கிய உலக நண்பர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்.

அவரை அவரது ஊரிலேயே சந்திப்பதற்காக சென்ற முதல் பயணத்தின் போது, இலங்கையிலிருந்து புறப்படும் தறுவாயில் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அந்த இல்லம் அமைந்துள்ள பிரதேசம் ரம்மியமானது. அருகே அழகிய குன்று. சில கணங்கள் அந்த இல்லத்தின் சுற்றுப்புறத்தை ரசித்தேன். ஏற்கனவே பல இலக்கியவாதிகளதும் இடதுசாரி அரசியல், தொழிற்சங்கவாதிகளினதும் கால் பதிந்த இல்லம்.

சின்னப்பபாரதியின் பிரத்தியேக அறை சிறிய நூலகமாகவே காட்சி தரும். அந்த இல்லத்தின் பின்புறம் சோலையாக காய், கனிகளுடனும் உயிர்ச்சத்துகள் நிரம்பிய கீரை வகைகள் பயிரிடப்பட்ட தோட்டமாகவும் காட்சியளிக்கிறது.

பல மணிநேரங்கள் சின்னப்ப பாரதியுடன் உரையாடியிருக்கிறேன். அத்துடன் அந்த இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்து அவரது குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பிலும் திழைத்திருக்கின்றேன்.

அமரர் சின்னப்ப பாரதியுடன் கட்டுரையாளர் லெ. முருகபூபதி

அவரது வாழ்வும் பணிகளும் இடதுசாரி இயக்கத்துடனும் முற்போக்கு இலக்கிய முகாமுடனும் பின்னிப் பிணைந்திருந்தன. தமிழில் அவரால் படைக்கப்பட்ட பல படைப்புகள் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்திய மொழிகளில் மட்டுமன்றி ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன. தமிழகத்தவர் மட்டுமன்றி இலங்கை மற்றும் புகலிட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த விருதுகளையும் பணப்பரிசில்களையும் பெற்றிருக்கின்றனர்

சின்னப்ப பாரதியின் ‘பவளாயி’ நாவலை உஸ்பெக்கிஸ்தான் மொழிக்கு மொழிபெயர்த்துள்ள லோலா மக்தூபா என்ற பெண்மணி உஸ்பெக்கிஸ்தானில் அமைந்துள்ள தாஸ்கண்ட் ஸ்டேட் இன்ஸ்ரிரியூட் ஒஃப் ஓரியண்டல் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அவரும் நாமக்கல்லுக்கு வந்துள்ளார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றுள்ளார்.

சின்னப்ப பாரதியின் பவளாயி நாவலை உஸ்பெக் மொழிக்குத்தந்துள்ள அவர், தான் மேலும் தமிழைக் கற்றுக் கொண்டு, உஸ்பெக் இலக்கியங்களை தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களை உஸ்பெக் மொழிக்கும் பெயர்ப்பதுதான் தனது இலக்கியப்பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சின்னப்ப பாரதியின் ‘சர்க்கரை’ நாவல் இலங்கையில் சிங்கள மொழியில் அறிமுகமானது. இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளிடத்தில் பேரன்பும் அபிமானமும் கொண்டிருந்த அவர், உபாலி லீலாரத்தின முதலான சிங்கள படைப்பாளிகளிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்தியவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்படிப்பட்டவர்களிடத்தும் தான் காணும் தவறுகளை எடுத்துரைக்கத் தவறாத இயல்பும் அதேவேளை தனது தவறுகளை எவரேனும் சுட்டிக்காட்டினால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அவரிடம் இருந்தது. அதுவே அவரது வழுவாத கொள்கை.

1935 இல் சாலைவசதியும் மின்சாரமும் இல்லாத, ஆனால் இயற்கை எழில்கொஞ்சும் பொன்னரிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். கலைஞர் கருணாநிதிதான் செம்மொழி அந்தஸ்துக்கு பாடுபட்டவர் என்றுதான் கேள்வியுற்றோம்.

ஆனால், பலவருடங்களுக்கு முன்பே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டுமென்று கோரி டில்லியில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருக்கிறது. அந்தத் தூதுக்குழுவில் அங்கம் வகித்தவர் சின்னப்பபாரதி.

தமிழ்நாட்டில் நாமக்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். ஆனால் சமகாலத்தில் நினைவுகளில் தங்கியிருப்பவர் படைப்பிலக்கியவாதி கு. சின்னப்பபாரதி.

லெ. முருகபூபதி
அவுஸ்திரேலியா


Add new comment

Or log in with...