நாட்டின் நிலைமையைப் புரிந்தவாறு சகிப்புத்தன்மை பேணுவதே உகந்தது!

உள்நாட்டில் உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளல், நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்ளல், இன்றைய நெருக்கடியை தெளிவாகப் புரிந்து கொண்டு அனைத்து அரசியல் தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படல் ஆகியவற்றின் மூலமே நாம் மீட்சி பெற முடியும்.

நாடு பொருளாதார நிலைமையில் மிக மோசமான கட்டத்துக்குச் சென்றுள்ளதென்பதை எவருக்குமே இனிமேல் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அன்றாட பாவனைப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை ஆகியவை எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியை நன்கு புலப்படுத்துகின்றன. எரிபொருள் நிலையங்களில் காணப்படுகின்ற கியூ வரிசை இன்னுமே குறைந்தபாடாக இல்லை.

இவ்வாறான நிலையில் இன்றைய நெருக்கடிக்கான காரணகர்த்தாக்கள் யாரென்று தேடிக் கொண்டிருப்பதாலேயோ அல்லது அரசியல்வாதிகள் மீது கண்டனம் தெரிவிப்பதாலேயோ எந்த நன்மையும் ஏற்பட்டு விடப் போவதில்லை. இன்றைய நெருக்கடி நிலைமையில் இருந்து நாடு எவ்வாறு மீள முடியுமென்பது குறித்தே அனைவரும் இன்றைய நிலையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

நாட்டு மக்கள் இன்றைய காலத்தில் நிறையவே நொந்து போயிருக்கின்றார்கள். எமது தாய்நாடு தற்போது நெருக்கடியான காலப்பகுதிக்குள் பிரவேசித்துள்ளதென்பதை கற்றறிந்தவர்கள் மாத்திரமன்றி சாதாரண மக்களும் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். இன்று எமது நாடு அனுபவிப்பது மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஆகும். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் இவ்வாறான நெருக்கடியை முன்னர் ஒருபோதுமே சந்தித்ததில்லை என்பதை அறிய முடிகின்றது.

மக்கள் பயன்படுத்துகின்ற அன்றாட பாவனைப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக மக்கள் அல்லல்படுகின்றனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்கள் மாத்திரமின்றி, நடுத்தர வர்க்க மக்களும் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதற்கு தற்போது அல்லல்படுகின்றனர்.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. வறிய மக்களின் துன்பங்கள் சொல்லும் தரமன்று. அத்துடன் சமையல் எரிவாயு மற்றும் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களின் விலையுயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அதேசமயம் சமையல் எரிவாயுவுக்குப் பதிலாக மாற்றுவழிகளை பயன்படுத்துவதில் மக்கள் பலர் ஈடுபட்டு வருவதை இப்போது காண முடிகின்றது. கிராமங்களிலுள்ள மக்கள் சமையல் முறைமையில் அன்றைய காலத்தைப் போன்று பாரம்பரிய முறைகளில் இறங்கி விட்டனர். தங்களது காணிகளில் கிடைக்கக் கூடிய சிறிய விறகுகளையும் கூட அவர்கள் இப்போது பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். தென்னை மரங்களில் இருந்து கிடைக்கின்ற அத்தனையும் இன்று சமையலுக்கான விறகுகளாக மாறியுள்ளன.

உமி மற்றும் மரத்தூளைப் பயன்படுத்தி விறகு அடுப்புகளில் கிராமத்து மக்கள் உணவு சமைப்பதைக் காண முடிகின்றது. அதே போன்று சிரட்டைக் கரி அடுப்பும் இன்று பாவனைக்கு வந்துள்ளது. குப்பையாக வீசுகின்ற மரத்தின் கழிவுப் பொருட்கள் எரிசக்தித் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. குறுகிய காலப் பகுதியில் கிராமங்களில் கூட சமையல் எரிவாயு வேகமாகப் பாவனைக்கு வந்திருந்த நிலையில், தற்போது கிராமத்து மக்கள் எரிவாயுவையே தங்கள் பாவனையில் இருந்து விலக்கிக் கொள்கின்ற நல்லதொரு மாற்றத்தையும் இக்காலத்தில் அவதானிக்க முடிகின்றது.

மக்களின் வாழ்வில் நெருக்கடி உருவான வேளைகளிலெல்லாம் அறிவியலும், புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதே வரலாறு ஆகும். அதேசமயம் நெருக்கடியிலிருந்து சமாளித்து வாழ்வதற்கான பொறுமையும், சகிப்புத்தன்மையும் மக்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டு விடுகின்றது. மனித இனத்தின் கடந்த கால வரலாற்றை எடுத்து நோக்குமிடத்து இவ்வாறான மாற்றங்களை எங்களால் அறிந்து கொள்ள முடிகின்றது.

இன்று எமது நாட்டில் உருவாகியிருப்பது நெருக்கடியை சமாளிப்பதும், அதனை வெற்றி கொள்வதற்குமான போராட்டம் ஆகும். முடிந்தவரை உள்நாட்டு உற்பத்தியை பெருக்கிக் கொள்வதிலும், நாட்டின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். சுற்றுலாத்துறையை ஊக்குவித்துக் கொள்வதும் பிரதானமான ஒன்றாகும்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை எமது நாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்வதற்கு இதுவே பிரதான வழியாகும். இலங்கை நிலைமையை பாரதூரமானதாகக் காண்பிக்கின்ற திட்டமிட்ட பிரசாரங்களை எதிரணியினர் நிறுத்திக் கொள்வதும் அவசியமாகும். எமது தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் அர்ப்பணிப்பு அவசியமாகும்.

 


Add new comment

Or log in with...