நாடுகளுக்கு உதவ முடிந்தமை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வெற்றி

- வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் 'கருணை ஊசி மருந்து' திட்டத்தின் ஊடாக 98 நாடுகளுக்கு இந்தியா கொவிட் தடுப்பூசிகளை வழங்க முடிந்தமை இந்திய வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் எட்டாண்டு ஆட்சியின் வெற்றி தொடர்பாக டில்லியில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உலகின் முக்கிய நிகழ்வுகளில் இந்தியா தன் பங்களிப்பை வழங்கி வந்திருப்பதாகவும், நேபாள பூகம்பம், யேமன் பிரச்சினை, மாலைதீவு தண்ணீர் பிரச்சினை, இலங்கை மண்சரிவு, மியன்மார் புயல், மொஸாம்பிக் வெள்ளம் என நட்பு நாடுகளின் கஷ்டங்களில் இந்தியா முதலாவது உதவும் நாடாகக் கைகொடுத்து வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கும் அவர், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன் நாடுகள் மற்றும் பசுபிக் தீவுகள் என்பன கொவிட் தொற்றினால் பொருளாதார பாதிப்புகளை எதிர்நோக்கியபோது இந்தியா தனது உள்ளூர் தயாரிப்பான தடுப்பூசிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருக்கும் அவர், கொவிட் தடுப்பூசியாகட்டும் அல்லது பொருளாதார கஷ்டங்களாகட்டும் தன் அயல் நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா முன்னணியிலேயே இருந்து வந்திருக்கிறது என்று அவர் தனது உரையில் மேலும் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...