- நிலைபேறான பால் பண்ணைத் திட்டத்திற்கு உதவி வழங்குவதாக உறுதியளிப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இன்று (16) காலை இலங்கைக்கான நியூஸிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டனிடம் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதன் மூலம் மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் நியூஸிலாந்து உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (16) காலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இருவருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான பல விடயங்கள் தொடர்பில் ஆளுநரும் உயர் ஸ்தானிகரும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
அதற்கமைய, ஆளுநரின் ஆலோசனைக்கமைய, கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் 'நிலைபேறான பால் பண்ணை திட்டம்' நியூஸிலாந்து உயர் ஸ்தானிகரினால் பாராடப்பட்டது. அது தொடர்பில் அவசியமான உதவிகளை வழங்குவதாக, உயர் ஸ்தானிகர் இதன்போது ஆளுநரிடம் உறுதியளித்தார்.
இலங்கையில் நியூஸிலாந்து உயர் ஸ்தானிகராலயம் ஸ்தாபிக்கப்பட்டு சுமார் ஒரு வருடம் கடந்துள்ளதோடு, அதன் மூலம் இலங்கைக்கு வந்துள்ள முதலாவது நியூஸிலாந்து உயர் ஸ்தானிகராக மைக்கேல் அப்பிள்டன் விளங்குகிறார்.
இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆளுநரும் உயர் ஸ்தானிகரும் விரிவாக கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சேதன விவசாயத் திட்டம் ஏன் தோல்வியடைந்தது என நியூஸிலாந்து உயர் ஸ்தானிகர் வினவினார். குறித்த திட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டதன் காரணமாக அத்திட்டம் சீர்குலைந்ததாக ஆளுநர் அவருக்கு விளக்கமளித்தார்.
குறித்த சந்திப்பில், மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
Add new comment