க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு அண்மையில் தோற்றிய மாணவர்களின் ஆதங்கம்

இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் நாளுக்கு நாள் பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்த வண்ணமுள்ளனர். இந்நிலையில் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியதாக தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 407,129 பேரும், தனியார் விண்ணப்பதாரிகள் 110,367 பேர் என மொத்தமாக 517,496 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்தனர்.

அனுராதபுர மாவட்டத்திலிருந்து இம்முறை 24,497 மாணவர்கள் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர். தேசிய மட்டத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் இம்முறை க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு தோற்றுகையில் தாம் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் சவால்கள் பற்றி அனுராதபுரம் கனேவல்பொல முஸ்லிம் மகா வித்தியாலத்திலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிலர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

முஜீபா பேகம் (அ/ கனேவல்பொல மு.ம.வி)
'கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் 19 பிரச்சினை காரணமாக பாடசாலைகள் முறையாக நடைபெறவில்லை. ஆசிரியர்கள் சில பாடங்களை நிகழ்நிலை முறையில் கற்பித்திருந்தாலும் கூட அவை அனைத்து மாணவர்களுக்கும் சரியான முறையில் கிடைக்கப்பெறவில்லை. மாணவர்களிடம் அதற்கான கருவிகள் இல்லாமை, இணைய வசதிகள் இல்லாமை போன்றன அவற்றுக்கான பிரதான காரணிகளாகும்.

பின்னர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் கடந்த சந்தர்ப்பத்தில் தினமும் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைபெற்றமையால் எமது கல்வியினை தொடர்வது மிகக்கடினமாக அமைந்திருந்தது. இரவு வேளைகளில் படிப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

அதன் காரணத்தினால் இம்முறை எமது பெறுபேறுகளை வெளியிடும்போது எமது தேர்ச்சி மட்டங்களை கணிக்கும் புள்ளித்திட்டத்தில் நாம் முகம் கொடுத்த அசௌகரியங்களையும் கருத்தில் கொண்டு பரீட்சைகள் திணைக்களம் செயற்படுமென எதிர்பார்க்கின்றோம்'.

முஹம்மத் றிபாத் (அ/ கனேவல்பொல மு.ம.வி)
'கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்கள் எமது கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எமது பாடத்திட்டங்கள் உரிய நேர காலத்தில் பூரணப்படுத்தப்படவில்லை. இவ்வருடம் ஆரம்பம் முதல் மின்சாரம் துண்டிப்பு தினமும் முன்னெடுக்கப்படுகிறது. இது வீட்டிலிருந்து சுய கற்றலில் ஈடுபடவும் இடையூறுகளை ஏற்படுத்தின. அத்தோடு பொருளாதார நெருக்கடி வேறு. இவ்வாறான பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தபடியே கற்று இப்பொதுப் பரீட்சையை எழுதியுள்ளோம். அதனால் எமது தேர்ச்சி மட்டங்களை கணிக்கும் புள்ளித்திட்டத்தில் நாம் முகம் கொடுத்த அசௌகரியங்களையும் பரீட்சைத் திணைக்களம் கருத்தில் கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது'.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்திருப்பது குறித்து அம்மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியரான எம்.எம். பாத்திமா பரீஹா (விஞ்ஞான பாட ஆசிரியை, அ/கனேவல்பொல மு.ம.வி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'2022 ஆம் ஆண்டு க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்கள் பலவித சவால்களை எதிர்நோக்கியிருந்தார்கள். கடந்த வருடம் மூன்று தவணைகளுக்குமுரிய பரீட்சைகளுக்கும் அவர்களால் முகம்கொடுக்க முடியாமல் போனது. மாதிரிப்பரீட்சைகள் எதுவும் சரியான முறையில் நடத்தப்படாத சந்தர்ப்பத்திலேயேதான் அவர்கள் இப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக அவர்களால் பாட விடயங்களில் உரிய முறையில் ஈடுபாடு காட்ட முடியாத நிலைமையும் கடந்த வருடங்களில் ஏற்பட்டிருந்தன. அப்பாடங்களை நாங்கள் அவர்களுக்கு நிகழ்நிலை முறையினூடாக கற்பித்தோம், இருந்தும் அவை மாணவர்களுக்கு திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை. இதனை அவர்கள் பாடசாலைக்கு மீண்டும் வருகை தந்ததன் பின்னர் அவர்களின் கல்வி நிலையினை அவதானித்ததன் ஊடாக அறிந்து கொண்டோம். பாடத்திட்டங்களும் சரியாக பூர்த்தி செய்ய முடியாமல் போனது.

அதேபோன்று தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் மாணவர்களை பாதிப்படைய செய்துள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக மின் துண்டிப்பு ஏற்பட்டதால் அவர்கள் கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர். ஒவ்வொரு வருடமும் உயர் தர மற்றும் சாதார தர பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாக மாகாண அல்லது வலயக்கல்வி பணிமனையினால் ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள் நடாத்தப்படுவது வழமை. ஆனால் இம்முறை அதுவும் நடைபெறாத சூழலில் தான் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்துவதற்கு எம்மாலான முயற்சிகளை நாம் மேற்கொண்டோம்'.

இதேவேளை இம்முறை இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரின் தந்தையான ஆர். முஹம்மது றிபாய்தீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

'பாடசாலை காலங்களில் எனது மகள் சிறப்பாக கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளை பெற்று வந்தார். ஆனால் பரீட்சை நெருங்கும் காலகட்டங்களில் ஒழுங்காக பாடசாலை நடைபெறாத காரணங்களால் எனது மகள் பரீட்சைக்கு உரிய முறையில் தயாராக முடியாத நிலைமைக்கு உள்ளானதை என்னால் அவதானிக்க முடிந்தது. இதற்கு மகளை குறை கூறவும் முடியாது. நாடு எதிர்கொண்ட கொரோனா அதனைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடி போன்றனவே அவ்வாறான நிலைக்கு அவரை உள்ளாக்கியது. இந்நெருக்கடிகளுக்கு நாட்டில் பெரும்பாலான மாணவ, மாணவியர் முகம் கொடுத்துள்ளனர்.

அதனால் எனது உள்ளிட்ட இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த பிள்ளைகளின் பெறுபேறுகள் திருப்திகரமான அமையுமா என்ற ஐயம் என்னைப் போன்று எல்லா பெற்றோரிடமும் காணப்படுகின்றது. அதனால் பரீட்சைகள் திணைக்களம் இவ்விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தியபடி செயற்படும் என எதிர்பார்க்கின்றேன்.

அந்த வகையில் இப்பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கற்றல் தொடர்பில் எதிர்நோக்கிய பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அவர்களது வேண்டுகோள்கள் குறித்து வடமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் வினவியபோது, 'கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவேண்டிய பரீட்சையை தான் நாங்கள் சுமார் ஆறு மாதங்கள் மேலதிக காலத்தை வழங்கி இந்த மே மாதம் நடத்தினோம். உண்மையிலேயே மாணவர்களுக்கு பிரச்சினைகள் இருந்தது தான், கடந்த காலங்களில் அவர்களுக்கு ஒன்லைனில் கற்பித்தது வெற்றியளிக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. உயர்தர பரீட்சை போன்று பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்யும் ஒரு பரீட்சையாக இது இல்லாததால் மாணவர்களின் சித்தி மட்டங்களை தீர்மானிக்கும் விடயத்தில் மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தும் என நம்புகின்றோம்' என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எது எவ்வாறு இருந்தாலும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான அரச பரீட்சைகளில் ஒன்றான க.பொ.த(சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் மாணவர்களைப் பாதிக்கும் வகையில் அமைவதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாட்டின் தற்போதைய நிலைமையினையும், கற்றலின் போது மாணவர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களையும் கருத்திற்கொண்டு நியாயமான தீர்மானத்தை எடுப்பதே பரீட்சைகள் திணைக்களத்தின் பொறுப்பாக உள்ளது.

ஐ.எம். மிதுன் கான்
கெக்கிராவ குறூப் நிருபர்


Add new comment

Or log in with...