கொவிட் 3 அலைகளுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தில் இந்தியா வலுவான மீட்சி

- அமெரிக்க திறைசேரி அறிக்கை

கொவிட் 19 பெருந்தொற்றின் மூன்று குறிப்பிடத்தக்க அலைகளை எதிர்கொண்ட போதிலும் வலுவான பொருளாதார மீட்சியை இந்தியா கண்டுள்ளது என்று அமெரிக்காவின் திறைசேரி, காங்கிரஸுக்கு அளித்துள்ள வருடாந்த அரையாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இப் பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கு 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியா முகம் கொடுத்ததோடு அதன் வளர்ச்சியில் அதிக தாக்கத்தையும் அது ஏற்படுத்தியது. அதனால் அதன் பொருளாதார மீட்சி தாமதமாகியுள்ளது.

இருந்த போதிலும், வருடத்தின் இரண்டாம் பகுதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டதால், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் வலுவாக மீட்சி கண்டுள்ளன. அத்தோடு இந்தியாவின் தடுப்பூசி வழங்கும் முயற்சிகளும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

2021 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியாகும் போது, இந்தியாவின் சனத்தொகையில் சுமார் 44 வீதத்தினருக்கு முழுமையாகத் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்த போதிலும் அது 2020 இல் ஏழு வீதமாகவே காணப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கொவிட் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் அது திரும்பியது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் ஓமிக்ரோன் திரிபின் ஊடான மூன்றாவது அலைக்கு இந்தியா முகம்கொடுத்தது. ஆனாலும்  இறப்புகளின் எண்ணிக்கையும் பரந்தளவிலான பொருளாதார வீழ்ச்சியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம் கொவிட் தொற்றுநோயின் பின்னணியில் 2021 முதல் பொருளாதாரத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி அளித்து வருகிறது. அதனால் 2022 நிதியாண்டில் மொத்த நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீதத்தை எட்டும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இது இத்தொற்றுநோய்க்கு முந்தைய பற்றாக்குறையை விட அதிகமாக இருக்க முடியும்.

என்றாலும் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவின்  பொருளாதார மீட்சியும் பொருட்களின் விலைகளும், குறிப்பாக எரிசக்தி விலைகள், முன்னணி இறக்குமதிகள் என்பன  54 வீதம் அதிகரிக்க வழிவகுத்தது. அத்தோடு ஏற்றுமதியும் அதிகரித்துள்ளன.

2021 இல் பணம் அனுப்புதல் சுமார் ஐந்து வீதமாக அதிகரித்து, 87 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 வீதத்தை எட்டியது.

அமெரிக்காவுடனான இந்தியாவின் இருபக்க வர்த்தகம் கடந்த ஆண்டில் கணிசமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

2013 க்கும் 2020 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியா அமெரிக்காவுடன் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு பொருட்கள் மற்றும் சேவை தொடர்பான இருபக்க வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...