திருமண பந்தத்தில் இணைந்த நயன்தாரா

6 வருட காதலின் பின், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் நேற்று (09) நடைபெற்றது.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று (09) சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் நடித்தார். அப்போது முதல் அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதனை வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.

இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள், பிறந்த நாள், பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடும் புகைப்படங்களை அவ்வப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவந்தார்.

கடந்த சில மாதங்களாகவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக, நயன்தாரா அறிவித்தார். இந்நிலையில், திருமணம் ஜூன் 09 அன்று நடைபெற உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவிக்கவே, தொடர்ந்து திருமண பத்திரிகையும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில், இருவரின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை நடைபெற்றது. இருவரின் தரப்பிலிருந்தும் திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண விருந்தின் மெனுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் அவர்களுடைய திருமணம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன.

திருமணத்திற்கு முன்னதாக, விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இன்று ஜூன் 09. இந்த நாள் நயனுக்கானது" எனவும், திருமணத்தை தன் வாழ்வின் புதிய அத்தியாயம் என்றும் தெரிவித்திருந்தார்.

இத்திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர்.

நடிகை நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. நயன்தாரா நடித்த 'O2' திரைப்படம் சில தினங்களில் வெளியாகவுள்ளது. ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி இயக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்தின்போது நயன்தாரா அணிந்திருந்த புடவை மற்றும் அணிகலன்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு இதோ...

நயன்தாராவின் திருமண புடவை ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்ததோடு, அது கரிஷ்மா மற்றும் மோனிகா ஆகிய வட இந்திய டிசைனர்களால் கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் செய்யப்பட்ட எம்பிராய்டரி டிசைன்கள் கர்நாடக கோயில்களின் வடிவமைப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

நயன்தாராவின் பிளவுஸில், பெண் தெய்வம் லட்சுமியின் 'மோட்டிவ்' டிசைன்களும், நயன்- விக்னேஷ் சிவனின் காதலை பறைசாற்றும் பேட்டர்ன்கள் என சின்னச் சின்ன வடிவங்களால் பிளவுஸ் முழுவதும் டிசைன் செய்யப்பட்டிருந்தது.

சிவப்பு நிறப் புடவைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் வைடூரிய அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் நயன்தாரா. மூன்று வகையான அணிகலன்களை அவர் கழுத்தில் அணிந்திருந்தார். கழுத்தையொட்டி அணிந்திருந்த சோக்கர் வைடூரியம் மற்றும் போல்கி கற்களால் ஆனது.

இரண்டாவதாக மரகதத்தால் ஆன ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். இத்துடன் ஏழு அடுக்குகள் கொண்ட ஆரம் அணிந்திருந்தார். இந்த ஆரம் வைரம் மற்றும் ரோஸ் கட்ஸ், போல்கி, மகரதக் கற்களால் ஆனது. மேலும் நயன் அணிந்திருந்த கம்மலில் cabchon என்ற கல் வகையைச் சுற்றி வைடூரிய கற்கள், வைர கற்களால் பதிக்கப்பட்டிருந்தன. நயன் அணிந்திருந்த வளையலும் மரகதக் கற்களால் ஆனது. இந்த நகை இந்திய மதிப்பின்படி கோடிகளைத் தாண்டும்.

இதுதவிர நயன்தாராவுக்கு சுமார் 5 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளாராம் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவோ, விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 20 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றை பரிசளித்துள்ளாராம்.

இதுதவிர விக்னேஷ் சிவனின் சகோதரிக்கு தங்க நகைகளையும் பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  ( (பிபிசி, விகடன்)


Add new comment

Or log in with...