நீதவானின் வீட்டில் சரணடைந்த ஜோன்ஸ்டன் பிணையில் விடுதலை

மே 09ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09) பிற்பகல் கோட்டை நீதவான் திலிண கமகேவின் மஹரகமவில் உள்ள இல்லத்தரில் நீதவான் முன்னிலையில் சரணடைந்த அவரை, ரூ. 10 மில்லியன் (ஒரு கோடி) கொண்ட இரண்டு சரீர பிணைகளில் நீதவான் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அவருக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு ஜோன்ஸ்டன் பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவை கருத்திற் கொண்டு, இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அது வரை அவரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இன்று (09) இரவு 8.00 மணி வரை செயற்படுத்த வேண்டாமென, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றப் புலனாய்வு திணைக்கள்திற்கு (CID) உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...