கைது செய்வதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு ஜோன்ஸ்டன் மனு

- கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்து மூல (Writ) உத்தரவொன்றை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மே 09 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி 'மைனா கோகம' மற்றும் காலிமுகத்திடல் 'கோட்டா கோகம' போராட்ட கள்ங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையிலான வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சந்தேகநபராக தாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில்  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தம்மை கைது செய்யத் தயாராகி வருவதாகவும், இது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் சார்பில் அவரது சட்டத்தரணியால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவொன்றை வழங்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மே மாதம் 09ஆம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் திலிண கமகேவினால் இன்றையதினம் (08) குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெனாண்டேவை கைது செய்வதற்காக, அவரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி முற்பகல், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, அலரிமாளிகைக்கு அருகிலுள்ள 'மைனா கோ கம' போராட்டக் களத்தை அரசாங்க சார்பு ஆதரவாளர்கள் தாக்கினர்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால் அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான அக்கட்சி ஆதாரவாளர்கள கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அரச சார்பு ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு அருகில் உள்ள 'மைனா கோ கம' போராட்டத் தளத்தையும் தாக்கினர்.

அதன்பிறகு அவர்கள், காலி முகத்திடலில் உள்ள 'கோட்டா கோ கம' எனப்படும் பிரதான போராட்டக் களத்திற்குச் சென்று கூடாரங்களை அழித்ததுடன், அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த நாடளாவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

விசாரணைகளைத் தொடர்ந்து, போராட்டக் களங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களும் பல உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...