தமிழக நிவாரணங்களை வழங்குவதில் CWC எந்த அழுத்தமும் விடுக்கவில்லை

100 வீதம் தோட்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்

 

தமிழக முதலமைச்சரினால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொதிகள் தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளரைத் தவிர்ந்த தோட்டத்திலுள்ள 100 சதவீதமானவர்களுக்கும் சென்றடைய வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் பட்டியலுக்கமைய, தோட்டப் புறங்களைப் பொறுத்தவரை குறைந்த வருமானம் பெறுபவர்களின் பட்டியலில் தோட்டத்  தொழிலாளர்கள் எவரும் உள்ளடக்கப் படமாட்டார்களென தெரிவித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், எம்மைப் பொறுத்தவரை தோட்டத்திலுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

தமிழக நிவாரணங்கள் விநியாகிக்கும் நடவடிக்கையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அழுத்தம் விடுப்பதாகவும், யார், யார் வறுமையானவர்கள், யாருக்கு இதனை விநியோகிக்க வேண்டுமென தமக்கு தெரியுமென இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கும் முகமாகவே செந்தில் தொண்டமான் நேற்று இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று (2) கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், தோட்டத் தொழிலிருந்து ஓய்வுப்பெற்றவர்கள் மற்றும் எவ்வித தொழிலிலும் ஈடுபடாதவர்கள் மாத்திரமே கிராம உத்தியோகத்தர்களின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பார்க்குமிடத்து ஒரு தோட்டத்தில் 20 சதவீதமானவர்களே இந்த நிவாரணங்களைப் பெற தகுதியானவர்களென கிராம உத்தியோகத்தர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது ஒரு தோட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரணம் கிடைக்க வேண்டுமென்பதை நோக்காக கொண்டுள்ளது என்றார். கொரோனா காலத்தில் 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவின் போது பல பிரச்சினைகளை தொழிலாளர்கள் எதிர்கொண்டனர். எனவே அவ்வாறான நிலையைத் தவிர்ப்பதற்காகவே நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தோம். குறிப்பாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் . இது அரசாங்கத்தின் சமுர்த்தி வேலைத்திட்டமோ அல்லது அரசாங்கத்தின் வேறு வேலைத்திட்டமோ அல்ல. அவ்வாறான வேலைத்திட்டங்கள் எனின் கிராம உத்தியோகத்தர்கள் கூறும் விடயங்கள் சரிவரும். ஆனால் இது தமிழக அரசாங்கத்தின் நிவாரணம் என்பதால் அனைத்து தோட்ட மக்களையும் நிவாரணம் சென்றடையும் வேண்டும் என்றார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...