குடற்புண் உபாதையிலிருந்து விடுபடுவதற்கு நமது சீரிய வாழ்க்கை முறையே அருமருந்து

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூறுகின்ற ஒரு பொதுவான பிரச்சினை 'எனக்கு அல்சர்' என்பதாகும். உண்மையில் அல்சர் என்பது புண் எனப்படும். எனவே ‘வயிற்றுப்புண்’ என்பதே சரியான வார்த்தைப் பிரயோகமாகும். இதைத் தவிர குடல்புண் என்றும் சித்தமருத்துவத்தில் ‘குன்மம்’ என்றும் கூறப்படுகின்றது.

பொதுவாக இந்நோயில் நெஞ்செரிவு, வயிறு எரிதல், வயிற்றுப் பொருமல், வயிறு ஊதல், வயிற்றில் இரைச்சல், வயிறு நோதல், சமிபாடின்மை, பசியின்மை, வாந்தி போன்ற பல்வேறு உபாதைகள் காணப்படும்.

நாம் ஓய்வெடுக்கக் கூட நேரமின்றி தற்காலத்திற்கு ஏற்ற வகையில்   ஓடிக் கொண்டிருக்கின்றோம். பதவிகள், பட்டங்கள், பணம், ஆடம்பர வாழ்வு, கேளிக்கைகள் போன்றவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எமது ஆரோக்கியம், மனஅமைதி, துன்பமற்ற வாழ்க்கை போன்றவற்றுக்கு கொடுத்திருக்கின்றோமா?

பிரதானமாக எமது உணவுப் பழக்கவழக்கங்களே குடல்புண் ஏற்படக் காரணமாகின்றது. தகுந்த நேர இடைவெளியில் உணவு உள்ளெடுக்காமை, நீண்ட நேரத்தின் பின் உணவு உண்ணல், அதிகமாக பட்டினி இருத்தல், அடிக்கடி விரதம், அதிக காரமான உணவுகளையும், அதிக சூடான உணவுகளையும் உண்ணல், உட்கொண்ட உணவு சரியாக சமிபாடடைய முன் அடுத்த வேளை உணவை உண்ணல், ஊட்டச்சத்து இன்மை, மதுபாவனை, அதிக மருந்துகளை உள்ளெடுத்தல், வலி மாத்திரைகளை அடிக்கடி உண்ணல் போன்றவற்றைக் கருதலாம்.

இதைத் தவிர வேறு நோய்களுக்கு பாவிக்கும் மருந்துகளின் தாக்கத்தாலும், மனக்கவலை, பயம், துக்கம், மனச்சோர்வு, நித்திரையின்மை போன்றவற்றாலும் இரைப்பையில் சுரக்கப்படும் அமிலத்தின் அதிகரித்த தாக்கத்தால் சமிபாட்டுடன் தொடர்புடைய இரைப்பை மற்றும் முன்சிறுகுடலின் உட்சுவரில் அழற்சி ஏற்பட்டு அந்நிலை தொடர்வதால் வயிற்றுப்புண் ஏற்படலாம். இதனை உரிய நேரத்தில் தீர்க்காவிட்டால் நாளடைவில் இரைப்பை அல்லது குடல் சார்ந்த புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

எனவே எமது நாளாந்த உணவுப்பழக்க வழக்கங்களை சீராக அமைத்துக் கொள்வதன் மூலம் இந்நோய் ஏற்படாமல் தவிர்க்கலாம் அல்லது ஏற்பட்ட நோயை இலகுவில் குணப்படுத்தலாம்.

சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். காலை எட்டு மணிக்குள்ளும், மதியம் ஒரு மணிக்குள்ளும், இரவு எட்டு மணிக்குள்ளும் உள்ளெடுக்கும் உணவு உடலிற்கு மிகவும் நன்மை தரும். காலையுணவு கட்டாயமாக்கப்படல் வேண்டும். 

அதிகளவு நீர் அருந்த வேண்டும். அதிகாலையில் எழுந்தவுடன் நீர் அருந்த வேண்டும். இரவில் சிறிதளவு வெந்தயத்தை அல்லது சீரகத்தை சுத்தமான நீரில் ஊறவைத்து காலையில் ஊறிய வெந்தயம் அல்லது சீரகத்துடன் சேர்த்து நீரையும் வெறும் வயிற்றில் பருகிவரலாம். வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் பால் அளவாக அருந்தலாம்.  காலை 6மணியளவில் அறுகம்புல் சாறு, வில்வமிலைச்சாறு, வல்லாரை இலைச்சாறு, சாம்பல் பூசணிச்சாறு, வாழைத்தண்டுச்சாறு, மாதுளம் பழச்சாறு, திராட்சைப் பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒரு சாற்றை வீட்டிலேயே தயாரித்து தினமும் அருந்தி வரலாம்.

நெல்லிக்காயை ஜுஸ் செய்து தயிர் கலந்து அருந்துதலும் நன்மை தரும். மோர், தயிர், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரி, நுங்கு போன்றனவும் உள்ளெடுக்கலாம்.

மதிய உணவாக நன்கு வேகவைத்த சோறு, மோர் சாதம், மற்றும் புழுங்கல் அரிசி வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்புச் சேர்த்து அருந்தலாம். அல்லது இக்கஞ்சியுடன் சிறிதளவு அதிமதுரப்பொடி சேர்த்து அருந்தலாம். அல்லது புழுங்கல் அரிசியுடன் உள்ளி, சிறிதளவு வெந்தயம், சீரகம் சேர்த்து கஞ்சியாக அருந்தலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களையும், முள்ளங்கி, புடோல், பூசணி, முட்டைக்கோஸ், கொத்தமல்லி, பிரண்டை, அத்திக்காய், பாகற்காய், வெண்டைக்காய், நீத்துப்புசணிக்காய் கறி, பாசிப்பயறு அல்லது துவரம் பருப்பு சேர்த்த கீரைக்கூட்டு, வாழைப்பூ பயறு சேர்த்த கூட்டு, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, அம்மான்பச்சரிசிக் கீரை, வாழைப்பூ சூப், அகத்திக்கீரை சூப், மணத்தக்காளி சூப் அல்லது மணத்தக்காளி கீரைக்கறி அல்லது மணத்தக்காளி கூட்டு,  கருவேப்பிலைக் கூட்டு, புதினா சட்னி அல்லது புதினா சாதம் அல்லது புதினா துவையல் போன்றனவும் உண்ணலாம்.

சமையலில் காரத்தை இயன்றளவு குறைக்க நற்சீரகத்தூள் அல்லது மல்லித்தூள் அல்லது கறிமஞ்சள்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஏலம், சுக்கு, கராம்பு, சீரகம் போன்றவற்றை சமவளவு எடுத்துப் பொடியாக்கி தினமும் இருவேளை அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம். அல்லது மாங்கொட்டையின் உட்பருப்பை காயவைத்து பொடியாக்கி மேற்கூறியளவு தேனுடன் இருவேளை சாப்பிட்டு வரலாம். அவ்வாறே அரை தேக்கரண்டி மிளகுப்பொடியை அல்லது சீரகப்பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

மேலும் மனக்கவலை, பயம், மனச்சோர்வு, பதற்றம் போன்றன ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். குறைந்தது தினமும் ஆறு தொடக்கம் எட்டு மணித்தியாலமாவது நித்திரை கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மனஅமைதியை ஏற்படுத்த மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.  கோபம் ஏற்படாது இயன்றளவு தவிர்க்க வேண்டும். ஏனெனில் கோபத்தால் இரைப்பையில் அமிலத்தின் சுரப்பு அதிகமாகி வயிற்றுப்புண்ணின் தாக்கத்தை அதிகரிக்கலாம். துரித உணவுகளான நூடில்ஸ், ப்ரைட் ரைஸ், பர்கர், பீட்சா அதிக புளி, மசாலா சேர்ந்த மற்றும் காரமான உணவுகள், வடை, முறுக்கு, பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக சூடான உணவுகள், கோப்பி, டீ, சொக்லேட், ஐஸ்கிறீம், சோடா, பால், புளிப்பான பழங்கள், ஊறுகாய், மிளகாய் வற்றல், சிவப்பு இறைச்சி, ஐஸ் தண்ணீர், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தல் சிறப்பு. மதுபானம், புகையிலைப் பாவனை தவிர்க்கப்படல் அவசியம்.

வைத்திய கலாநிதி
செல்வி வினோதா சண்முகராஜா
சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

கலாநிதி திருமதி கௌரி ராஜ்குமார்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்


Add new comment

Or log in with...