மன்னிப்பு இடைநிறுத்தப்பட்ட துமிந்த சில்வா CID யினால் கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை நேற்று (31) பிறப்பித்திருந்தது.

இதன்படி, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கமைய அவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும் துமிந்த சில்வாவுக்கு வௌிநாட்டு பயண தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் ஜனாதிபதி உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்றையதினம் (31) மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சுமார் 9,000 மரண தண்டனைக் கைதிகள் சிறையில் இருக்கும் போது, ​​துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி எதன் அடிப்படையில் முடிவு செய்தார் என்ற கேள்வி எழுவதாகவும், ஜனாதிபதியின் நடைமுறையை ஆராயும் அதிகாரம் நீதித்துறைக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்குவதாகவும் அவர் மன்றிற்கு தெரிவித்தார்.


Add new comment

Or log in with...