அமைச்சு பெறும் சு.க. உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம்

- மக்கள் சார்பான அரசின் தீர்மானங்களுக்கு மாத்திரமே ஆதரவு

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என, அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில், மக்கள் சார்பாக எடுக்கப்படும் நல்ல தீர்மானங்களுக்கு மாத்திரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்திருந்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்திற்கு புறம்பாக, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெறுவார்களாயின், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்பட வேண்டுமென மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் தற்போது அமைச்சுப் பதவிகளில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள், கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையில், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களான, மஹிந்த அமரவீர, விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராகவும், நிமல் சிறிபால டி சில்வா, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...