- சிங்கப்பூர் சென்றுள்ள அவரை சிறையில் அடைக்க உத்தரவு
- 9,000 மரண தண்டனை கைதிகள் இருக்கையில் இம்முடிவு நியாயமற்றது
- உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமணா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கஸ்ஸாலி ஹுஸைன் ஆகியோரினால் மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் இன்றையதினம் (31) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனை செய்த நீதிமன்றம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான உத்தரவையும் வழங்கியுள்ளது.
அதற்கமைய, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அத்துடன் துமிந்த சில்வாவுக்கு வௌிநாடு செல்வதற்கு எதிரான பயணத் தடை உத்தரவையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
மனுதாரர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார். துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் ஜனாதிபதி உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என அவர் இதன்போது மன்றிற்கு தெரிவித்தார்.
சுமார் 9,000 மரண தண்டனைக் கைதிகள் சிறையில் இருக்கும் போது, துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி எதன் அடிப்படையில் முடிவு செய்தார் என்ற கேள்வி எழுவதாகவும், ஜனாதிபதியின் நடைமுறையை ஆராயும் அதிகாரம் நீதித்துறைக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்குவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, அவருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என ஜனாதிபதி சட்டத்தரணி வாதிட்டார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஏனைய சட்டத்தரணிகளும் இக்கருத்தை முன்வைத்திருந்தனர்.
ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கும் நடைமுறையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் அரசியலமைப்பின் விதிகளை ஜனாதிபதி பின்பற்றியுள்ளதாகவும் தெரிவித்த அவர், எனவே அதனை நீதிமன்றில் சவால் செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
மனுக்களின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள துமிந்த சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி மாரப்பன, தனது கட்சிக்காரருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதியின் தீர்மானத்தை நீதிமன்றில் சவால் செய்ய முடியாது என தெரிவித்தார்.
சட்ட ரீதியாக பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அனைத்து சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த உயர் நீதிமன்றம், குறித்த மனுக்களை விசாரணை செய்ய அனுமதி வழங்கியது.
அதற்கமைய, இந்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 01ஆம் திகதி எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மனுவின் பிரதிவாதியான துமிந்த சில்வா அண்மையில் திருமணம் செய்த நிலையில், சிங்கப்பூருக்கு தேனிலவுக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment