குற்றத்தை ஒப்புக் கொண்டு அயலவர் வாக்குமூலம்

பிரேத பரிசோதனையின் பின் நேற்று சடலம் நல்லடக்கம்

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என உறுதிப்படுத்தல்

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம், மொரட்டுவை மத்திய விசேட நிருபர் பண்டாரகம, அட்டுலுகம பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பான மர்மம் நேற்று அம்பலமாகியுள்ளதுடன் அதற்கிணங்க சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் நேற்று குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தாமே குறித்த சிறுமியை படுகொலை செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 29 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை படுகொலை செய்யப்பட்டுள்ள சிறுமி பாத்திமா ஆயிஷா மீதான பிரேத பரிசோதனை அறிக்கைக் கிணங்க சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்படவில்லை என்ற தகவலும் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி கோழி இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள கடைவீதிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே சிறுமி பாத்திமா ஆயிஷா காணாமல் போயிருந்தார். அதனையடுத்து பிரதேசவாசிகள் சிறுமியை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது மறுநாள் சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அண்மையில் உள்ள சதுப்பு நிலத்தில் கிடந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து நடத்திய தேடுதலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய வேளையில் தாமே அந்த சிறுமியை கொலை செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை நேற்று பாணந்துறை வைத்தியசாலையில் நடைபெற்றது. சிறுமியை சகதியில் புதைத்த போது அவர் உயிருடன் இருந்ததாகவும் ஆனால் அவர் மூச்சுவாங்க முயன்றபோது சகதி சுவாசப்பை வரை சென்றுள்ளதாகவும் சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணரலால் அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். விஜேவீர தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர். பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான அடையாளம் எதுவும் கிடையாது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி சிறுமியின் ஜனாசா அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நேற்று இஷா தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் கீரை தோட்டம் ஒன்றின் சொந்தக்காரர் என்றும் அவர் உடலில் சில பகுதிகளில் காயங்கள் காணப்பட்டதாகவும் அவரது வீட்டில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாரம் சேறு படிந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் ஏற்கனவே தெரிவித்தனர். (ஸ)


Add new comment

Or log in with...