உலக பொருளாதார மந்தநிலை குறித்து உலக வங்கி எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்டிருக்கும் உணவு, வலுசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலை ஏற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஒன்று ஏற்படலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

‘இந்த மந்தநிலையை எவ்வாறு தவிர்ப்பது என்பது கடினமாக உள்ளது’ என்று உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் அமெரிக்க வர்த்தக நிகழ்வு ஒன்றில் கடந்த புதனன்று உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

சீனாவில் தீவிர கொரோனா பொது முடக்கம் மந்தநிலை ஒன்று பற்றிய கவலையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகப் பொருளாதார பின்னடைவு பற்றிய சமீபத்திய எச்சரிக்கையாக அவரது இந்த கருத்து உள்ளது.

‘உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாம் பார்ப்போமாயின், பொருளாதார மந்தநிலையை தற்போது எவ்வாறு தடுப்பது என்பது கடினமானதாக உள்ளது’ என்று மல்பாஸ் குறிப்பிட்டார். எனினும் அவர் குறிப்பிட்டு எந்த முன்னறிவிப்பையும் கூறவில்லை.

‘எரிசக்தி விலை இரட்டிப்பாகும் எண்ணம் மந்தநிலையை தூண்டுவதற்கு போதுமானதாக உள்ளது’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பை உலக வங்கி கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட முழு சதவீதப் புள்ளியாக, 3.2 வீதம் என குறைத்தது.

ஜி.டி.பி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது பொருளாதார வளர்ச்சியை கணிக்கும் ஒன்றாக உள்ளது. பொருளாதார செயல்திறன் எவ்வளவு சிறந்தது அல்லது மோசமானதாக உள்ளது என்பதை அளவிடுவும் மிக முக்கிய வழிகளில் ஒன்றாக இது இருப்பதோடு பொருளாதார நிபுணர்கள் மற்றும் மத்திய வங்கிகள் இதனை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் தங்கி இருப்பதாக மல்பாஸ் சுட்டிக்காட்டினர். இந்நிலையில் ரஷ்யாவின் எரிவாயுவை நிறுத்தினால் பிராந்தியத்தில் கணிமான மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பால் உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி பொருளாதாரம் ஏற்கனவே மந்தமடைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

உரம், உணவு மற்றும் வலுசக்தி பற்றாக்குறையால் வளர்ந்துவரும் நாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதை உலக வங்கித் தலைவர் குறிப்பிட்டுக் கூறினார்.

ஐரோப்பா, சீனா மற்றும் அமெரிக்காவில் மந்தமான வளர்ச்சியை பார்க்க முடிவதோடு வளர்ந்துவரும் நாடுகளில் பணவீக்கம் மேலும் கடுமையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக உணவு உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா மிகப்பெரிய பங்கு வகிப்பதோடு உலகளாவிய சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விதைகள் வர்த்தகத்தில் 53 வீத பங்கையும், கோதுமை வர்த்தகத்தில் 27 வீதமான பங்கையும் இந்த நாடுகள் வகிப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

ஆபிரிக்காவின் 25 நாடுகளுக்கான கோதுமையில் மூன்றில் ஒரு பங்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்தே தருவிக்கப்படுகிறது.

நைட்ரஜன், பாஸ்பரஸ் அத்துடன் பொட்டாசியத்தில் இருந்து தயாரிக்கப்படும் உரங்களின் 28 வீதமானவை ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

போரின் காரணமாக உக்ரைனில் இருந்து கப்பல் விநியோகங்களை மேற்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மறுபுறம் தடைகள் காரணமாக ரஷ்யாவின் வலுசக்தி ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...