பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவிப்பு
கல்வி, மற்றும் சுகாதாரத்துறை தவிர்ந்த ஏனைய சகல துறைகளிலும் அத்தியாவசியமற்ற செயல்களை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும் பிரதமர் தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள கடன்கள் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் நாட்டுக்குக் கிடைக்குமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை தற்போது இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி நான்கு வீதமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவுகளின் இருப்பை அதிகரித்து பொருளாதார ஏற்றுமதியை இலக்காகக் கொண்டதாக நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் நானும் இணைந்து கொண்டேன். நேற்று முன்தினம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி ஜூன் மாதமளவில் எமக்கு அந்த கடன் கிடைக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 04 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அதனைத் தவிர சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த கடனுதவிகள் கிடைக்கப் பெற்றதும் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு முன்னுரிமையளிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை கவனத்தில் கொள்ளும்போது எதிர்காலத்தில் நூற்றுக்கு 40 வீதமாக பணவீக்கம் அதிகரிக்கலாம்.
இதன்படி தற்போதைய நெருக்கடி நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் செலவினங்களை குறைப்பதற்கான முறைமை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு வீதமாக ஆரம்ப மிகை நிலுவையை அடைவதே இலக்காகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வரி சதவீதத்தை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டுக் கடன்களை எப்போதாவது நாம் செலுத்தியே ஆகவேண்டும். வெளிநாட்டுக் கையிருப்பு எம்மிடம் இல்லாவிட்டால் நாம் கடன்களை மேலும் மேலும் பெற்றுக்கொள்ளும் நிலையே ஏற்படும். அத்துடன் வரி விதிப்புகளை மீண்டும் அதிகரிக்க நேரும். கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துத் துறைகளினதும் அத்தியாவசியமற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் முக்கிய காரணமாகும். அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாட்டு மக்களுக்கு முடிந்தளவு நிதி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவும் முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment