அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்வதை தடுக்கும் உத்தரவு ஜூலை 25 வரை நீடிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை ஜூலை 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் (23) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெக்குணவெல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

இன்றையதினம் வழக்கு விசாரணைக்காக அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை என்பதோடு, அவர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெனாண்டோ தனது கட்சிக்காரருக்கு அழைப்பாணை கிடைத்துள்ளதாகவும் அடுத்த வழக்குத் தவணையில் அவர் மன்றில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்தை வழக்கை ஜூலை 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அவருக்கு எதிரான வெளிநாடு செல்வதற்கு எதிரான பயணத்தடை உத்தரவை அன்றையதினம் வரை நீடிப்பதற்கான உத்தரவையும் விடுத்தார்.

சர்வதேச இறையாண்மை முறிகள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி 18ஆம் திகதி பணம் செலுத்திய தரப்பினரின் பெயர் பட்டியலை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த பட்டியலை சமர்ப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2006ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி அமெரிக்காவின் இமாத் ஷா சுபைரி என்பவருக்கு, இலங்கை அரசுக்கு சொந்தமான 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், குற்றவியல் சட்டத்தின் கீழ், அஜித் நிவாட் கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது, ​​2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி செலுத்த வேண்டிய இறையாண்மை முறிகள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பணியாற்றிய போது, ​​அதன் பதவிகளில் நெருங்கிய உறவினர்களை நியமித்தமை மூலம், இரகசியத் தகவல்கள் கசிந்ததன் காரணமாக, இலங்கை அரசாங்கத்திற்கு ரூ. 10.04 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கப்ராலுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...