புத்தளம் வரலாற்றில் அழியாத தடம் பதித்தவர் கே.ஏ. பாயிஸ்

முன்னாள் பிரதியமைச்சரும், புத்தளம் நகரசபையின் முன்னாள் தலைவருமான மறைந்த கே.ஏ. பாயிஸின் ஒரு வருட நினைவு தினம் இன்று (23.05.2022) ஆகும். புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேசத்தில் தனித்துவம் பெற்றகே.ஏ.பி ஆகிய மூன்றெழுத்துகளால் அவர் குறிப்பிடப்பட்டார்.

புத்தளம் பிரதேசத்தில் இந்த மூன்றெழுத்துகளையும் அறியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். வறிய குடும்பத்தில் பிறந்த கே.ஏ பாயிஸ் பாடசாலையில் படிக்கும் காலம் முதலே ஏழை எளிய மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் அதிக அக்கறை கொண்டவராவார். இதற்கான அடிப்படையாக அவர் கல்வியையே கருதினார்.  

 புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர், தாம் கல்வி கற்கும் போது எதிர்நோக்கிய கணிதம், விஞ்ஞானம், உள்ளிட்ட பல பாடங்ளுக்கான ஆசிரிய பற்றாக்குறையால் புத்தளமும் புத்தளத்தைச் சூழவுள்ள பிரதேசங்களும் கல்வியில் தொடர்ந்தும் பின்தங்கி வருவதை நேரில் கண்டார். இதனையிட்டு பெரிதும் கவலையடைந்தார்.  

அதனால் உயர்தர வகுப்பு மாணவராக இருக்கும் போதே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், கல்வியை நிறைவு செய்த பின்னர் புத்தளத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான டொக்டர் ஐ.எம். இல்லியாஸ் ஊடாக அரசியலில் பிரவேசித்தார். மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம் அஷ்ரஃபின் அரசியலில் ஈர்க்கப்பட்ட இவர், அவரது அரசியல் பாசறையில் வளர்ந்தார். அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற உயர்பதவியையும் அடைந்தார். 

இந்நிலையில் 1997களில் புத்தளம் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு புத்தளம் நகரசபைத் தலைவரானார். அதன் பின்னர் புத்தளம் நகர சபையின் தலைவர் பதவியை மூன்று தடவைகள் இவர் வகித்துள்ளார். அத்தோடு 2004_ - 2010வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரான இவர் கால்நடைகள்வள பிரதிமைச்சராகப் பதவி வகித்தார்.  

புத்தளம் நகரினதும் புத்தளம் மாவட்டத்தினதும் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் அதிக அக்கறை  கொண்ட இவர், கல்வி அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தினார். அத்தோடு புத்தளம் நகரை இலங்கையில் அபிவிருத்தி அடைந்த நகர்களில் ஒன்றாகவும் முன்னணி நகராகவும் கட்டியெழுப்பவதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். குறிப்பாக கல்வி அபிவிருத்திக்கு முக்கிய இடமளித்தார்.  

புத்தளம் தொகுதியிலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர் மற்றும் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்காக வரலாற்று முக்கியத்துவம் மிக்க நடவடிக்கையை மேற்கொண்டார். அதனடிப்படையில் வடமேல் மாகாண சபையின் அன்றைய முதலமைச்சர் அத்துல விஜேசிங்கவுடன் 'அதுல_பாயிஸ்' ஒப்பந்தத்தைச் செய்தார். அதன் ஊடாக புத்தளத்திலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர், வளப்பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.  

அந்த வகையில் புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக இருந்த பாடசாலையை தனியொரு பாடசாலையாக வடமேல் மாகாண சபையின் அங்கீகாரத்தோடு ஸைனப் பாடசாலையாக உருவாக்கினார். இதன் பயனாக இப்பாடசாலையில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையும் வளப்பற்றாக்குறையும் பெரிதும் நிவர்த்திக்கப்பட்டன. அதன் விளைவாக ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.  

மேலும், தாம் உள்ளிட்ட மாணவப் பரம்பரை கற்கும் போது எதிர்கொண்ட கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைக்கு எதிர்காலப் பரம்பரையும் முகம் கொடுக்கக் கூடாது எனக் கருதி அவ்வாறான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்குடன் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு வித்தூன்றினார். அதன் பயனாக கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் மாத்திரமல்லாமல் மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் கூட உருவாக்கும் மையமாக இன்று இக்கல்லூரி விளங்குகிறது. 

அதேநேரம் புத்தளம் பிரதேச மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை திறந்த பல்கலைக்கழகத்தின் ஊடாகப் புத்தளம் பிரதேசத்திலேயே பெற்றுக் கொடுக்கும் வகையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கிளையொன்று புத்தளம் நகரில் அமைக்கப்படவும் வழிவகை செய்தார்.    

அதேநேரம் புத்தளம் பிரதேச இளம் பராயத்தினரின் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் துணைபுரியும் வகையில் சகல வசதிகளையும் கொண்ட புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கு புத்தளம் நகரில் அமைக்கப்பட வழிசமைத்தார். ஒரே சமயத்தில் 16விளையாட்டுக்களை நடத்தக் கூடிய வசதிகள் இவ்விளையாட்டரங்கில் உள்ளன. நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு, மெய்வல்லுனர் போட்டி, உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கும் இங்கு வசதிகள் உள்ளன. புத்தளம் நகருக்கான கேட்போர் கூடத்தையும் அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.  

புத்தளம் நகரை அழகுபடுத்துவதிலும் சுத்தமாக வைப்பதிருப்பதிலும் அவர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார். பல வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்தார். இதன் பயனாக வடமேல் மாகாண சபை நடத்திய சுத்தமான நகர் போட்டியில் புத்தளம் நகரசபை முதலிடமிடத்தைப் பெற்றுக் கொள்ள வழிவகுத்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்திற்கும் அநுராதபுரம் உள்ளிட்ட வடமத்திய மாகாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான புத்தளம் ஊடான பயணப் பாதையில் புத்தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 'கொழும்பு பேஸ்' தான் ஒரேயொரு கரையோர மைதானம் ஆகும்.

இதுவும் கே.ஏ.பி. யின் சிந்தனையில் உருவான அபிவிருத்தித் திட்டமாகும்.  

புத்தளத்தை பிராந்திய வர்த்தக மையமாக உருவாக்குவதிலும் அவர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார்.  'அல்பா' என்ற பெயரில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு பாரிய 'சொப்பிங்க் மோலை' அமைப்பதற்கு நடவடிக்கை ஆரம்பித்தார். அதன் பணிகள் தற்போது நிறைவுறும் தறுவாயில் உள்ளன.

புத்தளத்தை சூழவுள்ள எந்தப் பிரதேசத்தைத் சேர்ந்தவரும் தமது தேவைகளையும் வசதிகளையும் புத்தளம் நகரில் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.  

புத்தளம் நகர மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்துவரும் குடிதண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவும் அவர் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

காலாவி ஆற்றிலிருந்து புத்தளத்திற்கு குடிநீரைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இத்திட்டத்தின் ஊடாக புத்தளம் நகர மக்கள் மாத்திரமல்லாமல் புத்தள நகருக்கு வெளியே வாழும் மக்களும் நன்மை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.  

புத்தளம் நகரினதும் புத்தளம் பிரதேசத்தினதும் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கக் கூடியவராக இருந்தார் மறைந்த பாயிஸ். மக்கள் சேவையின் நிமித்தம் எந்த வேளையிலும் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கக் கூடியவராக இருந்தார் அவர்.

அரசியலில் உயர்பீடங்களுடன் நெருக்கமான உறவை இவர் பேணி வந்ததன் பயனாக புத்தளம் துரித அபிவிருத்திப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. அத்தோடு பிரதேசத்தில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதிலும் அவர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.

அத்தோடு புத்தளம் மாவட்டத்தில் அரசியலுக்கு பலரை அவர் அறிமுகம் செய்தார். அவ்வாறு அறிமுகப்பட்டவர்களில் ஒருவரான எனக்கு அரசியலைக் கற்றுத் தந்தவரும் அவரேயாவார்.  

இவ்வாறு அளப்பரிய சேவையாற்றி வந்த கே.ஏ.பி எவரும் எதிர்பார்த்திராத சமயத்தில் கடந்த வருடம் இதே தினத்தில் (23.05.2021) திடீரென காலமானார். அவரது இழப்பு புத்தளத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.  அவர் புத்தளத்திற்காக ஆற்றியுள்ள சேவைகள் புத்தளம் வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன.

எம்.எஸ்.எம். ரபீக்
புத்தளம் நகரசபைத் தலைவர்


Add new comment

Or log in with...