தமிழகத்திலிருந்து நாளை வந்தடையும் இந்திய மக்களின் முதற் கட்ட ரூ. 2 பில். பெறுமதியான உதவிப் பொருட்கள்

- 9,000 மெ. தொன் அரிசி, 50 மெ. தொன் பால்மா, 25 மெ. தொன்னுக்கும் அதிக மருந்துகள்
- மொத்த உதவி ரூ. 5.5 பில்லியனுக்கும் அதிகம்
- ஏற்கனவே இந்தியாவினால் 3.5 பில்லியன் டொலர் பொருளாதார உதவி

இந்திய மக்களால் நன்கொடையாக வழங்கப்படும் 2 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் (16 மில்லியன் அமெரிக்க டொலர்) அதிக பெறுமதியான பாரியதொரு மனிதாபிமான உதவித்தொகுதி நாளை (22) கொழும்பை வந்தடையவுள்ளது.

 

 

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் உள்ளடங்கிய இத்தொகுதி, உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

2022 மே 18ஆம் திகதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.

தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த பங்களிப்பானது 5.5 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதியானதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும். அத்துடன் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள தமது சகோதர உறவுகளுடன் துணைநின்று, இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் பன்முக முயற்சிகளை பூரணப்படுத்துவதாக, இந்திய மக்களிடமிருந்து வழங்கப்படும் இந்த உதவி அமைகின்றது. பல்வேறு அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் சமூக அமைப்புகள் பல தமது உதவிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளன.

இலங்கைக்காக இந்திய மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அபரிமிதமான இந்த ஆதரவு, இவ்வருடம் ஜனவரி முதல் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிக்கு மேலதிகமாக அமைகின்றது.

அத்துடன் இதற்கு மேலதிகமாக மருந்துப் பொருட்கள், உலருணவு நிவாரணங்கள் போன்றவை இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...