மரியுபோலில் மேலும் 700 உக்ரைன் வீரர்கள் சரண்

உக்ரைனின் மரியுபோலிலுள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலையில் பதுங்கியிருந்த மேலும் 700 வீரர்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி படையெடுத்தது. மூன்று மாதங்களை எட்டியுள்ள போரில் உக்ரைன் தரப்பில் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தலைநகர் கியேவ், கார்கீவ் உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து மிகப்பெரிய நகரமும், தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொன்பாஸ் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே உள்ளதுமான மரியுபோல் நகரைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யப்படை தொடர்ந்து போரிட்டு வருகிறது. மரியுபோலின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினாலும் மிகப்பெரும் உருக்காலையில் உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்து சண்டையிட்டு வந்தனர்.

கடந்த இரு மாதங்களாக மரியுபோல் இரும்பாலையில் பதுங்கி போராடி வந்த உக்ரைன் வீரர்கள், வேறுவழியின்றி தற்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர்.

கடந்த திங்கள் இரவு 959 பேர் சரணடைந்த நிலையில் மேலும் 771 வீரர்கள் சரணடைந்துள்ளதாகவும் இதனால் தற்போது 1,730 உக்ரைன் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் 80 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த ஒவ்வொரு வீரரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது. சரணடைந்த வீரர்கள், டொனட்ஸ்க் குடியரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒலியோ நிவ்காவில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளது குறித்து உலக செஞ்சிலுவைச் சங்கம் பதிவு செய்துள்ளது. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...