மலையகத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே மண்சரிவுகளும் இடம்பெற்றுள்ளன. தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் நேற்று (19) காலை 6.30 மணியளவில் தொடர் குடியிருப்பு தொகுதியின் பின்புறத்தில் 50 அடி உயரத்திலுள்ள மதில் சரிந்து விழுந்ததில் நான்கு குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.
இதன்போது, ஒரு வீட்டில் இருந்த 53 வயதுடைய தாய் ஒருவருக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டது.இதனால், அவர் உடனடியாக தலவாக்கலை தோட்ட மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். அத்தோடு, கர்ப்பிணித் தாயொருவர் எவ்வித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
அத்தோடு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதோடு,பெறுமதிமிக்க பொருட்களும் மண் மேட்டில் புதைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.இப்பகுதியில்,தொடர்ந்து மழை பெய்வதால் மண் சரிவு அபாயங்களும் ஏற்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் தலவாக்கலை பொலிஸார், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)
Add new comment