வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பில் வைத்திருப்போருக்கு இறுதிச் சந்தர்ப்பம்

- வங்கியில் வைப்பிலிட 2 வாரங்கள் அவகாசம்
- டொலர் விலை குறைவடைவதால் இதுவே சரியான தருணம்
- கையிருப்பில் வைத்திருக்கும் டொலர் தொகை 15,000 இலிருந்து 10,000 ஆக குறைக்க நடவடிக்கை

எந்தவொரு நபரும் தனது கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நேற்று (19) இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற, அதன் நாணயக் கொள்கை தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

அந்நியச் செலாவணிச்சட்டத்தின் கீழ், தற்போது நபர் ஒருவர் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கக் கூடிய உச்ச வரம்பாக 15,000 டொலர் பெறுமதி குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இச்சட்டத்தின்கீழ் வெளிநாட்டு நாணயம் எவ்வாறு தனக்கு கிடைக்கப் பெற்றது என்பதை அந்நபர் விளக்கமளிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நபர் ஒருவர் வெளிநாடு சென்று திரும்பிய போது அல்லது எவரேனும் பரிசாக வழங்கிய, தனது உடைமையில் உச்சபட்சமாக வைத்திருக்கக் கூடிய 15,000 டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை 03 மாதங்கள் வரையே அவ்வாறு தனது உடைமையில் வைத்திருக்க முடியுமெனவும், அதன் பின்னர் தனது வெளிநாட்டு நாணயக் கணக்கிலோ அல்லது சாதாரண கணக்கிலோ வைப்பிலிட வேண்டுமென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அண்மைக்காலமாக கறுப்புச் சந்தையில் காண்பிக்கப்படும் இலாப நிலையை கருத்திற் கொண்டு, பொதுமக்கள் வெளிநாட்டு நாணயங்களை சேமிக்க ஆரம்பித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். இவ்வாறு வெளிநாட்டு நாணயங்கள் பாரியளவில் சேமிக்கப்படுவதை தடுத்து, அவற்றை பெற்று தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய இறக்குமதித் தேவைக்காக பயன்படுத்துவதே இந்நடவடிக்கையின் நோக்கமென கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

தற்போது டொலர் விலை குறைவடைந்து வருவதாலும், கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய உச்சபட்ச வெளிநாட்டு நாணயத் தொகையை 10,000 டொலராக குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாலும், இவ்வாறு தங்களது கையிருப்பில் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் வைப்பிலிடுவதற்கான சரியான தருணம் இதுவே என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, இவ்வாறு வெளிநாட்டு பணத்தை வைத்திருப்பவர்கள் அந்தப் பணத்தை வங்கியிலுள்ள வெளிநாட்டு நாணயக் கணக்கில் டொலராக வைப்பிலிடவோ அல்லது அந்தப் பணத்தை ரூபாவாக மாற்றி ரூபாவில் வைத்திருக்குமாறும் குறிப்பிட்ட அவர், இந்நடவடிக்கைக்காக 02 வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் அவ்வாறு கைப்பற்றப்படும் பணத்துக்கு, அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது ஏற்கனவே உள்ள சட்டம் என்பதோடு, அதனை தற்போது இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் விடயமே தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அவற்றில் மேலும் இறுக்கங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், அண்மையில் பல்வேறு இடங்களில் அதிக தொகையிலான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டமையும் சுட்டிக்காட்டினார்.

தற்போது  பொருளாதாரம் சரியான பாதையில் பயணிப்பதாலேயே டொலரின் பெறுமதி குறைவடைந்து வருவதற்கான காரணமென அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையை மாற்றமின்றி பேண, நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய,

  • துணைநில் வைப்பு வசதி வீதம் 13.50%
  • துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 14.50%
  • நியதி ஒதுக்கு விகிதம் 4.00%

றிஸ்வான் சேகு முகைதீன்

PDF File: 

Add new comment

Or log in with...