பதுக்கல்: ஓர் இஸ்லாமிய நோக்கு

வாங்குதல், விற்றல், சந்தையின் இயல்பான போட்டிநிலை போன்ற விடயங்களில் இஸலாம் தனிமனித சுதந்திரத்தை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் சில தனிமனிதர்களின் பேராசையை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. அத்தகைய ஒன்றுதான் அடுத்தவர்களுக்கு தேவை இருக்கும் போது, தீங்கிழைக்கும் விதமாக, பொருட்களைப் பதுக்கி விலையை அசாதாரணமான முறையில் உயர்த்தி, அதிக இலாபம் பெற்றுக்கொள்ளும் செயற்பாடாகும். இவ்வாறு பொருட்களைப் பதுக்குவதை இஸ்லாம் தடுத்துள்ளது.

'நிச்சயமாக நாம் உங்களை அகிலத்தாருக்கு அன்பாக, அருளாகவே அனுப்பினோம் (ஆதாரம்: அன்பியா 107) என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களைப் பற்றி குறிப்பிடுகிறான். 'நிச்சயமாக நான் அன்பைப் பரிசாக பெற்றவன்' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: ஹாகிம், தபரானி, பைஹகி)

ஒருவன் அன்புள்ளவனாக இருப்பதன் மூலம் இறையன்பை பெற்றுக்கொள்ள முடியும். 'இரக்கமாக நடந்து கொள்பவர்களை ரஹ்மானும் (அன்பாளன், அல்லாஹ்) நேசிப்பான். பூமியில் இருப்பவர்களுக்கு அன்பு காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்களுக்கு அன்பு காட்டுவான்' என்றும் அன்னார் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)

இந்த நபிமொழிகளின் ஊடாக முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர், மனிதன், மிருகம் என்ற வேறுபாடின்றி அனைத்து படைப்புகளுடனும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதனைப் புரிந்துகொள்ளலாம்.

அந்த வகையில் ஒரு வியாபாரியுடைய முழு எண்ணமும் முயற்சியும் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்வதுடன் மாத்திரம் சுருங்கி விடலாகாது. மனிதாபிமானம் நிறைந்த ஒரு சந்தையைக் கட்டியெழுப்புவதே இஸ்லாத்தின் நோக்கமாகும். இந்த அடிப்படையில்தான் பதுக்கலை இஸ்லாம் ஹராம் ஆக்கியுள்ளது. சந்தையின் சகட ஓட்டத்துக்கு ஏற்ப விலையைத் தீர்மானிக்கவிடாது பொருட்களின் விலையைக் கூட்டுவதற்காக பொருட்களை பதுக்குவதையே இது குறித்து நிற்கிறது.

பதுக்கல் என்பது 'மனிதர்களும், அரசுகளும், உயிரினங்களும் கடுமையான தேவையில் இருக்கும் போது பணம், பொருள், பயன், பணி போன்றவற்றை அதன் பற்றாக்குறை காரணமாக வழமைக்கு மாற்றமாக விலை அதிகமாக உயரும் வரை, அவற்றை வழங்காது தவிர்ந்து கொள்வதை அல்லது பதுக்குவதை குறிக்கும்'

அதாவது மனிதர்களுக்கு அவசியமானவற்றை வழங்காது தடுத்துக்கொள்வதே பதுக்கல் ஆகும். உணவுப்பொருட்கள், ஆடைகள், மருத்துவம், மாத்திரைகள், கருவிகள் போன்ற பொருட்களாக மாத்திரமல்லாமல் தொழில்வாண்மை, போக்குவரத்து, மருத்துவம் போன்ற சேவைகளாகவும் கூட இது அமையலாம். இவை மனிதனுக்கு மிக அவசியமானவை. அவற்றை பெற்றுக்கொடுப்பது வாஜிப் (மிக அவசியம்) ஆகும்.

அதேநேரம் ஒரு பொருள் பற்றாக்குறையாக இல்லாத நிலையில் அவற்றை சேமிப்பது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டதல்ல. ஆனால் பதுக்கல் மனிதர்கள், நாடு, உயிரினங்களுக்கு தீங்கு விளைப்பதன் காரணமாகவே இஸ்லாம் அதனை ஹராமாக்கியுள்ளது. இங்கு மிருகங்களைக் கூட உள்ளடக்கியிருப்பது இஸ்லாத்தின் சிறப்பம்சத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது அத்தியாவசியத் தேவை (ழரூரிய்யாத்) தேவைகளை (ஹாஜிய்யாத்) நிறைவேற்றுவது இஸ்லாத்தின் நோக்கங்களில் ஒன்றாகவும் கடமையுமாக விளங்குகிறது. அதனால் தேவைகள் பூர்த்தியடைவதற்கு தடையாக அமைவது தடுக்கப்பட்டவையாகும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் 'பொருட்களை பதுக்குபவன் பாவியாவான்' என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அபூ தாவூத், திர்மிதி, இப்னு மாஜா)

பாவியைத் தவிர வேறு யாரும் பொருட்களைப் பதுக்க மாட்டார்கள். பாவி என்ற சொல் ஒரு மென்மையான சொல் அல்ல. அது ஒரு கடுமையான சொல். பிர்அவ்ன், ஹாமான், அவர்களை சார்ந்த கொடூரமானவர்களை குர்ஆன் இத்தகைய சொல்லைப் பயன்படுத்தி கண்டிக்கிறது.

'பிர்அவ்ன், ஹாமான், அவர்களை சார்ந்தவர்கள் பாவிகளாக இருந்தார்கள்'

(கஸஸ் 08)

இதேவேளை பதுக்குபவன் தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, 'யார் உணவுப் பொருட்களை நாற்பது இரவுகள் பதுக்கி வைக்கிறாரோ அவனை விட்டும் அல்லாஹ் நீங்கிக்கொள்கிறான். அவனும் அல்லாஹ்வை விட்டு நீங்கி விடுவான் என்றுள்ளார்கள்.

(ஆதாரம்: அஹ்மத்)

மஃகல் இப்னு யஸார் (ரழி) அவர்களின் மரணத்தருவாயில் உமையா கவர்னரான உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் (ரழி) அவர்கள் சுகம் விசாரிப்பதற்காக வந்தார்கள். அப்போது அவர் மஃகல் (ரழி) யிடம் 'நான் ஹராமான முறையில் மக்களின் இரத்தத்தை ஓட்டியுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா? என்று கேட்க, 'எனக்கு அப்படி தெரியாது' என்றார்கள். மீண்டும் 'முஸ்லிம்களுடைய விலை என்ற விடயத்தில் நான் தலையீடு செய்துள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா? என்று கேட்க, 'எனக்கு அப்படி தெரியாது' எனக்கூறிவிட்டு, என்னை 'உட்கார வையுங்கள்' என்றார்கள். அவரை அமர்த்தி வைத்த போது 'உபைதுல்லாவே செவிமடுங்கள்' என்று கூறி, நான் நபிகளாரிடம் பலமுறை செவிமடுத்த ஒரு விடயத்தை கூறுகிறேன் என்றார்கள். அதாவது, 'விலையை அதிகரிப்பதற்காக யார் செயல்படுகின்றாரோ அவரை அல்லாஹ் நரகில் மிக கடுமையான இடத்தில் அமர்த்துவான்' என்றார்கள்.

(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், தபரானி)

மேலும் 'யார் நாற்பது தினங்கள் உணவை பதுக்கி வைக்கிறாரோ அவரது உள்ளம் கடுமையாகிவிடும்' என்று அலி(ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது அவனது உள்ளம் இறுகிவிடும். கருனை, இரக்கம், அன்பு போன்ற தெய்வீக பண்புகள் நீங்கிவிடும். பதுக்கல் செய்பவனின் உள்ளம் கடுமையாகப் பல காரணங்கள் துணைபுரிகின்றன. அவன் தனது நலனை மாத்திரமே பார்க்கிறான். சமூகத்துக்கு ஏற்படும் தீங்கை நோக்குவதில்லை. விலைகுறையும் போது கவலைப்படுவான், கூடும் போது மகிழ்ச்சியடைவான். அவனது உள்ளத்திலிருந்து அன்பு நீங்கி விடுவதும் அந்த இடத்தை கடும் போக்கு பிடித்துக்கொள்வதும் ஆச்சரியமானதல்ல. ஒருவனிடம் அன்பு எடுபட்டு போவது ஒரு தண்டனையாகும். எனவே மக்கள் தேவையுடன் இருக்கும் போது பதுக்குபவனிடம் சுயநலனும் அன்பு இல்லாத வரண்ட போக்கும் ஏற்படுவது இயல்பானது. அவன் தனது மாளிகையை மனிதர்களின் எலும்புக்கூடுகளின் மீதுதான் அமைத்துக்கொள்கிறான். அவன் பல்லாயிரக்கணக்கானவர்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றவன்.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள், 'பதுக்குபவன் மிக மோசமானவன். விலைகள் குறைவடைவதை காணும் போது கவலைப்படுவான். விலை உயர்வதை காணும்போது சந்தோஷமடைவான் என்றார்கள்.

(ஆதாரம்: தபரானி, பைஹகி)

மற்றொரு தடவைக் குறிப்பிடும் போது, பொருட்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சந்தைப்படுத்துபவன் வாழ்க்கை வசதிகள் ரிஸ்க் வழங்கப்படுகிறான். மக்களுக்கு தேவையிருந்தும் பதுக்கி வைத்திருந்து ஒரேயடியாக சந்தைக்கு போடுபவன் சபிக்கப்பட்டவனாவான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்: இப்னு மாஜா, தாரமி)

இவ்வாறான பின்னணயில் உணவுப்பொருட்களை பதுக்குவது தான் ஹராம். ஏனைய பொருட்களை பதுக்கலாம் என்று நினைப்பது மிகவும் தவறானதாகும். மனிதர்களுக்கு தேவையுள்ள நிலையில் எந்தவொரு பொருளைப் பதுக்குவதும் ஹராம். அது உணவுப் பொருட்களாகவோ உடை, மருத்துவம், வீட்டுபொருட்கள், பாடசாலைக்கு தேவையானவை, சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். அதனால் மனிதனுக்கு பயன்படும் பொருட்களைப் பதுக்குவது பாரிய அளவில் தீங்குகளை ஏற்படுத்தும். மனிதனின் தேவை உணவு மாத்திரமல்ல, மாறாக உண்ணல், பருகல், வாழ்தல், கற்றல், மருந்துசெய்தல், இடம் பெயர்தல், தொடர்புகொள்ளுதல் போன்ற அனைத்துடனும் தொடர்புபடுகின்றது.

மனிதர்களுக்கு தீங்கு ஏற்படும் விதமாக பதுக்கப்படும் அனைத்தும் பதுக்கல் என்ற வட்டத்தில் வரும். மனிதனின் தேவை அதிகரிக்க அதிகரிக்க பாவத்தின் பாரதூரம் அதிகரித்து செல்லும். இதில் மிக பிரதானமானது அத்தியாவசிய பொருட்களாகும்.

மக்களின் வாழ்க்கைப் போக்கு மாறிவிட்டன. மானுட தேவைகள் வளர்ந்துள்ளன. ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட விடயங்கள் இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டன. இன்று அவசியமாக கருதப்படும் விடயங்கள் நாளை அத்தியாவசியமான தேவையாக மாறலாம். அதனால் மனிதனுக்கு தேவை இருக்கும்போதும் பொருளுக்கு பற்றாக்குறை இருக்கும் போதும் பதுக்குவது முற்றிலும் பிழையான செயற்பாடு என்பது தெளிவாகிறது.

அஷ்ஷெய்க் யூ.கே. றமீஸ்
MA சமூகவியல்


Add new comment

Or log in with...