பொது நிதி குறித்து உமர் (ரழி)

உமர் (ரழி) அவர்களது புதல்வர்களான அப்துல்லாஹ்வும் உபைதுல்லாஹ்வும் ஒரு முறை ஈராக்கை நோக்கிச் செல்லும் படையில் சென்றிருந்தனர். அவர்கள் திரும்பி வரும் வேளையில் பஸ்ராவின் கவர்னரான அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர் அவ்விருவரையும் வரவேற்றார்.

'உங்கள் இருவருக்கும் மிகவும் பயனுள்ள எதையாவது என்னால் செய்ய முடியுமாக இருந்தால் செய்வேன்' என்றார். பின்னர் 'இங்கு நான் அமீருல் முஃமினீன் அவர்களுக்கு அனுப்ப வைக்கவிருக்கும் பணம் உண்டு. அதனை நான் உங்களிடம் தருகிறேன். அதனைப் பயன்படுத்தி நீங்கள் ஈராக்கிலிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு சென்று மதீனாவில் விற்பனை செய்யலாம்.

அமீருல் முஃமினீன் அவர்களுக்கு மூலதனத்தைச் செலுத்திவிட்டு, இலாபத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறினார். நாங்கள் அதனை விரும்புகிறோம் என அவ்விருவரும் கூறினர். எனவே, அவர் அவ்விருவரிடமும் பணத்தைக் கொடுத்தார். உமர் (ரழி) அவர்களுக்கு அவ்விருவரிடமிருந்தும் பணத்தைப் பெறுமாறு ஒரு கடிதத்தையும் கொடுத்தனுப்பினார்.

அவ்விருவரும் ஈராக்கில் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு வந்து மதீனாவில் விற்பனை செய்து இலாபமீட்டினர். மூலதனத்தை உமர் (ரழி) அவர்களிடம் கையளித்த போது, 'படையிலிருந்த அனைவருக்கும் உங்கள் இருவருக்கும் கடன் தந்தது போல் அவர் கொடுத்தாரா?' என வினவினர். அதற்கு அவ்விருவரும் 'இல்லை என்றனர்'. 'நீங்கள் இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களின் புதல்வர்கள் என்பதனால் உங்களுக்கு பணம் தந்திருக்கிறார். எனவே, பணத்தையும் இலாபத்தையும் தந்துவிடுங்கள்' என்றார்.

அப்போது அப்துல்லாஹ் (ரழி) மௌனமாக இருந்தார். உபைதுல்லாஹ் (ரழி) 'இப்பணம் குறைந்திருந்தால் அல்லது அழிந்திருந்தால் நாங்கள் அதனை செலுத்த வேண்டி இருந்திருக்கும், எனவே நீங்கள் இவ்வாறு இலாபத்தைக் கோருவது நியாயயமற்ற ஒரு விடயம்' அமீருல் முஃமினீன் அவர்களே!' என்றார். அப்போது உமர் (ரழி) அவர்கள் திரும்பவும் 'பணத்தையும் இலாபத்தையும் செலுத்துங்கள்' என்றார். தொடர்ந்தும் அப்துல்லாஹ் (ரழி) மௌனம் சாதித்தார். ஆனால், உபைதுல்லாஹ் (ரழி) திரும்பவும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அவ்வேளை உமர் (ரழி) அவர்களது அவைத் தோழர்களில் ஒருவர் 'அமீருல் முஃமினீன் அவர்களே! இந் நடவடிக்கையை நீங்கள் கிராழாக (முழாரபா) கருதலாமே!' என்றார்.

அப்போது உமர் (ரழி) அதனை நான் கிராழாக கருதுகிறேன் என்றார். பின்னர் மூலதனத்தையும் இலாபத்தில் பாதியையும் பெற்றுக் கொண்டார். அப்துல்லாஹ் (ரழி), உபைதுல்லாஹ (ரழி) அவர்களும் இலாபத்தில் மீதி அரைப்பங்கைப் பெற்றுக் கொண்டனர். (முவத்தா மாலிக்)

ஏ.எம். முஹம்மத் ஸப்வான்
சீனன்கோட்டை, பேருவளை


Add new comment

Or log in with...