மர்மப் பொருள் தொடர்பில் அமெரிக்காவில் விசாரணை

அமெரிக்காவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் அவதானிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் பற்றிய முதலாவது பகிரங்க கொங்கிரஸ் விசாரணையில் சொற்பமான விளக்கங்களே கிடைத்துள்ளன.

பாராளுமன்ற புலனாய்வு உப குழு முன் கடந்த செவ்வாய்க்கிழமை தோன்றிய, பென்டகன் அதிகாரிகள், இதுபற்றி தற்போது இடம்பெற்று வரும் விசாரணையின் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

எனினும் இந்த வானில் தோன்றும் மர்மப் பொருள் பற்றி தரவு சேகரிக்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்க புதிய செயலணி ஒன்றுக்கான பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

வானில் அடையாளம் காணமுடியாத பொருள்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டில் அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றம், மர்மப் பொருள் குறித்து தகவல் அளிக்கும் போக்கை வழக்கமாக்குவதற்கு இராணுவம் மேற்கொண்ட முயற்சி ஆகியவற்றால் கூடுதல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு வெளியான அறிக்கையின்படி அடையாளங்காண முடியாத பொருட்கள் தொடர்பில் 2004ஆம் ஆண்டிலிருந்து 140க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாயின.

பலவற்றுக்குக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமைச்சு கூறியிருந்தது. வேற்றுலக மனிதர்களின் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. இருப்பினும் அவர்கள் குறித்து இதுவரை உறுதியான ஆதாரம் ஏதுமில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

எனினும் இராணுவ விமானங்கள் வானில் மர்மப் பொருட்களை காணும் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இதில் சில அமெரிக்க இராணுவ ராடார் அமைப்புகளில் ஆளில்லா விமானங்கள் அல்லது பறவைகளால் ஏற்பட்ட குழப்பங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...