கட்சிகளை உடைத்தல், உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்

பஷில்ராஜபக்க்ஷ அரசியலில் இருக்கும் வரை நாட்டில் மாற்றத்தை கொண்டுவரமுடியாதென, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.  பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பாக நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

சபாநாயகர் தெரிவில் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட தீர்மானித்திருந்தன. இதனை இல்லாமல் செய்தவர் இந்த பெஷில் ராஜபக்‌ஷவே. அரசியலில் இருந்து ஒதுங்கும் வரை அல்லது அவரை அப்புறப்படுத்தாதவரை நாட்டி அரசியலில் மாற்றத்தை கொண்டுவர முடியாது.

பிரதி சபாநாயரை தெரிவு செய்யும் விடயத்தில்,

பெண்ணொருவர் தெரிவாக வேண்டுமென்பதே பிரதமரின் கருத்தாக இருந்தது. இதன்படி, அனைத்து தரப்பினருடனும் ஜக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி பெண் ஒரு வரை பெயரிட்டிருந்தது.அதற்கு அனைவரும் சம்மதித்திருந்தனர். இந்நிலையிலேயே, பெஷில் ராஜபக்‌ஷவின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒருவர் நியமிக்கப்பட்டார். 

இதனால், பாராளுமன்றத்தில் இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.இதனால், வாக்கெடுப்பின் மூலமாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது.

இரண்டு குழுக்களாக பிரிந்து செயற்படவும் இந்நிலைமை வழிகோலியது. பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இருந்த ஒற்றுமையை சீர் குலைத்தது இதுதான்.கட்சிகளை உடைப்பது, உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது போன்ற நிலைமைகள் அரசிலில் இல்லாதுபோக வேண்டுமானால், குறித்த இந்நபர் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும்.

பாராளுமன்றத்தில், பிரதமர் ரணில் விக்ரசிங்க நினைப்பது போல நடக்க முடியாது என்பதை இந்த பிரதி சபாநாயகர் தெரிவு புலப்படுத்தியுள்ளது. இதை, பிரதமருக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டது.

இவ்வாறானவர்களுடன் தொடர்ந்து பிரதமர் எப்படி பயணிக்கப்போகின்றார்? அவர் எதிர்பார்க்கின்ற மாற்றத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார்.? தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது அல்லது அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படுவது என்பதெல்லாம் வெறும் பேச்சில் மாத்திரமே இருக்க முடியும்.இவற்றை செயலில் காட்ட முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பாக உடனடியாக சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். யாருடன் தொடர்ந்து பயணிப்பது. அப்படியானால் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? என்பதை சிந்தித்து செயற்பட வேண்டும்.

இல்லாவிட்டால் அவர் எதிர்பார்க்கின்ற இலக்கை நோக்கி ஒரு நாளும் பயணிக்க முடியாது. பெஷிசிலின் தலையீடு தொடருமாக இருந்தால் ஏனைய கட்சிகள் பிரதமருக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்ற ஆதரவை தொடர முடியுமா? என்ற கேள்வியும் ஏற்படும்.எனவே இது தொடர்பாக பிரதமர் உடனடியாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(நுவரெலியா தினகரன் நிருபர்) 

 


Add new comment

Or log in with...