சோமாலியாவுக்கு படையை அனுப்ப அமெரிக்கா முடிவு

டொனால்ட் டிரம்ப் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை திரும்பப் பெறும் வகையில் சோமாலியாவுக்கு அமெரிக்க துருப்புகளை அனுப்ப அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

அல் ஷபாப் போராட்டக் குழுவுக்கு எதிரான போருக்கு உதவும் வகையிலேயே இந்தப் படைகளை நிலைநிறுத்த பெண்டகன் கோரியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் 2020 இல் சோமாலியாவில் இருந்து சுமார் 700 அமெரிக்கத் துருப்புகளை வாபஸ் பெற்றார். இந்நிலையிலேயே கிழக்கு ஆபிரிக்க நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சூழலிலேயே அமெரிக்கா தனது படைகளை மீண்டும் நிலைநிறுத்தவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்ற முன்னாள் அமைதிச் செயற்பாட்டாளரான புதிய ஜனாதிபதி ஹசன் ஷெய்க் மஹ்மூத், சர்வதேச பங்காளிகளுடன் நெருக்கமாக செயற்படவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

சோமாலியா பல தசாப்தங்களாக பாதுகாப்பற்ற சூழலை அனுபவித்து வருவதோடு அந்த நாட்டை முன்னர் கைப்பற்றி இருந்த இஸ்லாமியவாத போராளிகள் இன்றும் நாட்டின் கணிசமான பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.


Add new comment

Or log in with...